காவேரிப்பட்டணத்தில், சினிமா தியேட்டரில் வாலிபரை கொன்ற நண்பருக்கு ஆயுள் தண்டனை-கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு


காவேரிப்பட்டணத்தில், சினிமா தியேட்டரில் வாலிபரை கொன்ற நண்பருக்கு ஆயுள் தண்டனை-கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 11 Nov 2021 9:06 PM IST (Updated: 11 Nov 2021 9:06 PM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணத்தில் சினிமா தியேட்டரில் படம் பார்த்து கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் வாலிபரை பீர்பாட்டிலால் குத்திக்கொன்ற நண்பருக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

கிருஷ்ணகிரி:
காவேரிப்பட்டணத்தில் சினிமா தியேட்டரில் படம் பார்த்து கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் வாலிபரை பீர்பாட்டிலால் குத்திக்கொன்ற நண்பருக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
நண்பர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் மிட்டள்ளி ஜீவா நகரை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் மாணிக்கம் (வயது 22). அதே பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவருடைய மகன் சிவா (22). 
நண்பர்களான இவர்கள் 2 பேரும் கூலித்தொழிலாளர்கள் ஆவார்கள். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ந் தேதி இவர்கள் 2 பேரும் காவேரிப்பட்டணத்தில் உள்ள சினிமா தியேட்டர் ஒன்றில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் பார்க்க சென்றனர்.
பீர்பாட்டிலால் குத்திக்கொலை
அவர்கள் படம் பார்த்து கொண்டிருந்த போது மாணிக்கம், சிவாவை பார்த்து கரடி என்று கூறினார். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது 2 பேரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த சிவா தான் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து மாணிக்கத்தின் கழுத்து பகுதியில் குத்தினார். 
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மாணிக்கத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஆயுள் தண்டனை 
இந்த கொலை தொடர்பாக காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட சிவாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பு கூறினார். 
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் குமரவேல் ஆஜராகி வாதாடினார்.

Next Story