தனியார் பஸ் மோதியதில் தலை நசுங்கி பெண் பலி
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் அசுர வேகத்தில் வந்த தனியார் பஸ் மோதியதில், தலை நசுங்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
திண்டுக்கல்:
மருத்துவமனைக்கு வந்த பெண்
திண்டுக்கல் மாவட்டம் வி.எஸ்.கோட்டை அருகே உள்ள மார்க்கம்பட்டியை அடுத்த எல்லைப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 29). கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்தார். இவருக்கு தர்ஷிணி (10) மகள் இருக்கிறாள். நேற்று லட்சுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற நினைத்தார்.
இதற்காக நேற்று காலை எல்லைப்பட்டியில் இருந்து திண்டுக்கல்லுக்கு வந்த ஒரு தனியார் பஸ்சில் ஏறினார். அந்த தனியார் பஸ் மதியம் 12 மணிக்கு திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு வந்தது. அங்கு பஸ் நின்றதும், முன்பக்க வாசல் வழியாக லட்சுமி கீழே இறங்கினார்.
தலை நசுங்கி பலி
அப்போது லட்சுமி பயணித்த பஸ்சுக்கு மிக நெருக்கமாக மற்றொரு தனியார் பஸ் மின்னல் வேகத்தில் அங்கு வந்தது. எதிர்பாராத வகையில் லட்சுமி மீது அந்த தனியார் பஸ் மோதியது. அதை பார்த்த சக பயணிகள் கூச்சலிட்டனர். ஆனால் மோதிய வேகத்தில் தனியார் பஸ்சின் சக்கரத்தில் லட்சுமி சிக்கி கொண்டார்.
பஸ்சின் சக்கரம் ஏறியதில் அவர், தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அதை பார்த்ததும் ஆத்திரம் அடைந்த பயணிகள் பஸ்சை நோக்கி திரண்டு சென்றனர். உடனே பஸ்சை நிறுத்தி விட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசாருக்கு பயணிகள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதேநேரம் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் அசுர வேகத்தில் வரும் பஸ்களால் தொடர்ந்து விபத்துகள் நடக்கின்றன. அதற்கு நிரந்தரமாக முடிவு கட்ட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
(பாக்ஸ்) அசுர வேகத்தில் திரும்பும் பஸ்கள்
திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு தினமும் 700-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இதில் ஒருசில பஸ்கள் நகருக்குள் நுழைந்ததும் மின்னல் வேகத்தில் செல்கின்றன. மேலும் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்துவது சாலையில் செல்வோரை அச்சுறுத்துவது போன்று உள்ளது. மேலும் பஸ் நிலையத்துக்குள் நுழைந்து உரிய இடத்தில் நிற்கும் வரை பஸ்கள் அசுர வேகத்தில் சென்று திரும்புகின்றன.
இதேபோல் பஸ்களை பின்னால் நகர்த்தும் போதும் சில டிரைவர்கள் கவனக்குறைவாக செயல்படுகின்றனர். இதனால் விபத்து தொடர்கதையாகி பலருக்கு கால் முறிவு ஏற்பட்டு உள்ளது. சில நேரம் உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனினும் யாரும் கண்டு கொள்வதாக தெரியவில்லை. இதனால் எந்த நேரம் விபத்து நடக்குமோ? என்ற அச்சத்துடன் காத்திருக்கும் சூழல் உள்ளதாக பயணிகள் புலம்புகின்றனர்.
(பாக்ஸ்) வேக கட்டுப்பாடு வருமா?
திண்டுக்கல் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வருவதற்கு 2 வழிகளும், பஸ்கள் வெளியேற 2 வழிகளும் உள்ளன. மேலும் இங்கு வந்து செல்லும் பஸ்கள், பயணிகளை கணக்கிட்டால் பஸ் நிலையத்தில் போதிய இடவசதி இல்லை என்றே கூறலாம். இதனால் காலை, மாலை நேரத்தில் பஸ் நிலையத்துக்குள் நெரிசலாக இருக்கிறது.
ஒருசில நேரம் பயணிகள் நிற்பதற்கு கூட இடம் இருப்பதில்லை. ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் சில பஸ்கள் அதிவேகமாக உள்ளே வந்து திரும்புகின்றன. இதுவே விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே பஸ் நிலையத்துக்குள் குறைந்த வேகத்தில் பஸ்கள் வரும் வகையில் வேக கட்டுப்பாடு கொண்டு வரவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story