திண்டுக்கல்லில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை


திண்டுக்கல்லில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை
x
தினத்தந்தி 11 Nov 2021 9:22 PM IST (Updated: 11 Nov 2021 9:22 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் தயார்நிலையில் பேரிடர் மீட்பு படையினர் உள்ளனர்.

திண்டுக்கல்:

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. சென்னை உள்பட சில பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் தவித்து வருகின்றனர். அதேநேரம் மாநிலம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இதனால் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்கும்படி அரசு உத்தரவிட்டது. 

இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை கொடைக்கானல், தாண்டிக்குடி பகுதிகள் கஜா புயலில் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே 60 பேரை கொண்ட பேரிடர் மீட்பு படை உருவாக்கப்பட்டது.

இதில் சத்தியமங்கலத்தில் 6 மாதம் பயிற்சி பெற்ற 20 அதிரடிப்படை போலீசாரும், பேரிடர் மீட்பு பணிகளில் அனுபவம் பெற்ற ஆயுதப்படை போலீசார் 40 பேரும் இடம்பெற்று உள்ளனர். 

இவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல 5 வாகனங்கள், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க 2 ரப்பர் படகுகள், கயிறுகள், மலையேறும் கருவிகள், மரம் அறுக்கும் எந்திரங்கள், அதிக ஒளிவீசும் டார்ச்லைட்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இந்த பேரிடர் மீட்பு படையினர் திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். கனமழை, புயல் ஏற்பட்டால் சம்பவ இடத்துக்கு பேரிடர் மீட்பு படையினர் சென்று மீட்பு பணியில் ஈடுபடுவார்கள். 

இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் நேற்று சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்துக்கு வந்தார். பின்னர் பேரிடர் மீட்பு படையினரின் உபகரணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர்களுக்கு சீருடை வழங்கி, பேரிடர் காலத்தில் துரிதமாக செயல்பட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Next Story