டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பா.ஜனதா போராட்டம்
வடுகப்பட்டியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே வடுகப்பட்டியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை அரசு விதிமுறைகளை மீறி கோவில், பள்ளிக்கூடம், நூலகம், வணிக வளாகங்கள் அருகே இருப்பதாகவும், இங்கு வரும் மதுபிரியர்களால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். எனவே இந்த கடையை அகற்றக்கோரி பா.ஜனதா, வணிகர் சங்கங்கள் மற்றும் வெற்றிலை விவசாயிகள் சார்பில் டாஸ்மாக் கடை அருகே போராட்டம் நடைபெற்றது. இதற்கு பா. ஜனதா ஒன்றிய தலைவர் நல்லபாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச்செயலாளர்கள் அழகுவேல், மாரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ராஜபாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர் மலைச்சாமி, மாநில செயலாளர் வசந்த் பாலாஜி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.
மேலும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தரையில் அமர்ந்தவாறு கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்த தேனி டாஸ்மாக் உதவி மேலாளர் செல்வி மீனாட்சி, பெரியகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துக்குமார், தாசில்தார் ராணி சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 30 நாட்களுக்குள் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றி அமைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story