‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேறும் சகதியுமான சாலை
நெல்லை பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரி முன்பு உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. தற்ேபாது பெய்த மழையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர். வாகனங்கள் செல்லும்போது, மாணவர்கள் மீது சகதி படும் அவலமும் நிலவுகிறது. எனவே, அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- சிவசூரியா, கீழதேவநல்லூர்.
தெருவிளக்கு எரியுமா?
நெல்லை மாநகர எல்லைக்கு உட்பட்ட உடையார்பட்டி கலைவாணர் என்.எஸ்.கே. தெருவில் கடந்த ஒரு வாரமாக தெருவிளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அங்கு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகையால், அங்கு தெருவிளக்கு எரிவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- ஜெய்சங்கர், உடையார்பட்டி.
நோய் பரவும் அபாயம்
பாளையங்கோட்டை மகாத்மாகாந்தி மார்க்கெட்டில் குப்பைகள் சரிவர அகற்றப்படாமல் கிடக்கிறது. மேலும் தற்போது பெய்த மழையில் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் கொசு உற்பத்தியாகி, ேநாய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படாமல் பாதுகாக்க அதிகாரிகள் கவனம் செலுத்தினால் மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
- முத்துக்குமார், பாளையங்கோட்டை.
சீமைக்கருவேல மரங்களால் இடையூறு
ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்தில் சாலையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கின்றன. அந்த சாலை வழியாக செல்லும் வாகனங்களில் ஜன்னல் ஓரங்களில் இருப்பவர்கள் மீது முள்செடிகள் பட்டு அவர்கள் காயம் அடையும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எதிரே வாகனங்கள் வரும்போது ஒதுங்குவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சாலையோரம் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.
பயணிகள் நிழற்கூடம் தேவை
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகாவில் அமைந்துள்ளது கீழக்கலங்கல் கிராமம். இங்குள்ள மேல பஸ் நிறுத்தம், கீழ பஸ்நிறுத்தம் ஆகிய இரு பஸ் நிறுத்தங்களிலும் தினமும் ஏராளமான பயணிகள் நின்று வெளியூர்களுக்கு பஸ் ஏறி சென்று வருகின்றனர். ஆனால், இங்கு நிழற்கூடங்கள் எதுவும் இல்லாததால், பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று சிரமப்பட வேண்டி உள்ளது. ஆகவே, இந்த இரு பஸ் நிறுத்தங்களிலும் புதிதாக நிழற்கூடங்கள் அமைத்து, அமர்வதற்கு இருக்கை வசதிகளும் ஏற்படுத்தினால் பயணிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
- என்.டி.டெக்கான், கீழக்கலங்கல்.
குப்பைத்தொட்டிகள் வைக்கப்படுமா?
திருவேங்கடத்தில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று 4 பஜார்கள் உள்ளன. இங்கு 200-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இந்த 4 பஜார் சந்திப்பிலும் குப்பை தொட்டிகள் எதுவும் வைக்கப்படவில்ைல. இதனால் சாலைகளிலும், அருகில் உள்ள கால்வாயிலும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, அங்கு குப்பைத்ெதாட்டிகள் அமைத்து முறையாக குப்பைகளை அகற்றுவதற்கு பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
- ஆனந்தராஜ், குளக்கட்டாக்குறிச்சி.
சாலை, வடிகால் வசதி வேண்டும்
கடையநல்லூர் தாலுகா அரியநாயகிபுரம் பஞ்சாயத்து பெரியசாமிபுரம் கிராமத்தில் உள்ள வடக்கு தெருவில் குடிநீர் குழாய் இணைப்பு கொடுப்பதற்காக கான்கிரீட் சாலை தோண்டப்பட்டது. அதன்பிறகு சாலை சீரமைக்கப்படவில்லை. மேலும் அந்த பகுதியில் வடிகால் வசதியும் இல்லை. இதனால் தற்போது பெய்த மழையில் அந்த சாலை சேறும் சகதியுமாக மிகவும் மோசமாக காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் மக்கள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே அங்கு சாலையை சீரமைக்கவும், வடிகால் வசதி ஏற்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- முகேஷ், பெரியசாமிபுரம்.
சேதமடைந்த வாறுகால்
தூத்துக்குடி தட்டார் தெரு எக்ஸ்டென்சன் பகுதியில் வாறுகால் உடைந்து காணப்படுகிறது. மேலும் அதில் குப்பைகள் நிறைந்து காட்சி அளிக்கிறது. இதனால் கொசு உற்பத்தியாகி, நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் புதிய சாலை போடுவதற்காக சாலையும் ேதாண்டப்பட்டு அப்படியே போடப்பட்டு உள்ளது. இதனால் குண்டும் குழியுமான சாலையில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே, சேதமடைந்த வாறுகால் மற்றும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- ஜூடு, தூத்துக்குடி.
அடிப்படை வசதிகள் இல்லை
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை கிருபாஸ்நகர் தேரி ரோட்டில் தெருவிளக்கு இல்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், அந்த வழியாக அச்சத்துடனேயே மக்கள் செல்ல வேண்டி உள்ளது. மேலும் குப்பை தொட்டி வசதி இல்லாததால் ஆங்காங்கே குப்பைகளை கொட்டும் அவலம் உள்ளது. இதுதவிர குடிநீர் வசதியும் இல்லை. எனவே தெருவிளக்கு, குப்பைத்தொட்டி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- குருசாமி, கிருபாஸ்நகர்.
Related Tags :
Next Story