குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை வடியவைக்க நடவடிக்கை
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தில் மழையால் பாதித்த இடங்களில் உள்ளாட்சித்துறை செயலர் வல்லவன் ஆய்வு செய்தார்.
பாகூர், நவ.12-
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தில் மழையால் பாதித்த இடங்களில் உள்ளாட்சித்துறை செயலர் வல்லவன் ஆய்வு செய்தார்.
குடியிருப்பை சூழ்ந்த மழைநீர்
தொடர் மழையின் காரணமாக பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கிருமாம்பாக்கம், சேலியமேடு, வில்லியனூர் மெயின் ரோடு, பிள்ளையார்குப்பம் பேட், வார்க்கால்ஓடை, மதிகிருஷ்ணாபுரம், மேல்பரிக்கல்பட்டு, பரிக்கல்பட்டு, கொமந்தான்மேடு சாலை, காட்டுக்குப்பம், கன்னியக்கோவில், புதுநகர், மணமேடு ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த பகுதியில் மழைநீரை வடியவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் ஊழியர்கள் 2 பொக்லைன் எந்திரம் மற்றும் 13 ராட்சத மோட்டார்கள் மூலம் மழைநீரை வெளியேற்றி வருகின்றனர்.
துணை சபாநாயகர் ஆய்வு
இந்த நிலையில், நெட்டப்பாக்கம், பாகூர் தொகுதிகளில் மழை சேதங்களை துணை சபாநாயகர் ராஜவேலு, செந்தில்குமார் எம்.எல்.ஏ., உள்ளாட்சித்துறை செயலர் வல்லவன் ஆகியோர் ஆய்வு செய்தனர். மணமேடு, பாகூர், கன்னியக்கோவில், சித்தேரி அணைக்கட்டு ஆகிய பகுதிகளை அவர்கள் பார்வையிட்டனர்.
அப்போது கன்னியக்கோவில் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை தேசிய நெடுஞ்சாலை வாய்க்காலில் இணைக்க நடவடிக்கை எடுக்க உள்ளாட்சித்துறை செயலர் வல்லவன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மணமேடு பகுதியில் பராமரிப்பு இன்றி உள்ள சமுதாய நலக்கூடத்தை சரிசெய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது உள்ளாட்சித்துறை இணை இயக்குனர் பலராமன், செயற்பொறியாளர் (பொறுப்பு) திருநாவுக்கரசு, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story