தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
சாலையில் குவிந்து கிடக்கும் இளநீர் கூடுகள்
பழனி கிரிவீதியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையோரத்தில் இளநீர் கூடுகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. தற்போது பழனி பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழைநீர், இளநீர் கூடுகளில் தேங்கி நிற்பதால் டெங்கு கொசுப்புழுக்கள் உருவாகிறது. எனவே சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் இளநீர் கூடுகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அழகேஷ், பழனி.
தெருவிளக்குகள் அமைக்கப்படுமா?
ஆத்தூர் தாலுகா பாளையங்கோட்டை அருகே உள்ள பிரவான்பட்டி கிராமத்தில் தெருவிளக்குகள் முறையாக அமைக்கப்படவில்லை. இதனால் அந்த கிராமத்தின் பல்வேறு தெருக்கள் இரவில் வெளிச்சம் இன்றி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே முறையாக தெருவிளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமேஷ்குமார், பிரவான்பட்டி.
அகற்றப்படாத சாக்கடை கழிவுகள்
தேனி அல்லிநகரம் 13-வது வார்டு பிள்ளையார்கோவில் தெருவில் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கால்வாயில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகள், மண் குவியல்கள் அந்த தெருவில் உள்ள வீடுகள் முன்பு கொட்டி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அகற்றப்படவில்லை. இதனால் தெரு முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாண்டி, அல்லிநகரம்.
அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை
வேடசந்தூர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் நடந்து செல்லும் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் துரத்திச்சென்று தெருநாய்கள் கடிக்கின்றன. கடந்த 2 நாட்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்டோர் தெருநாய்களிடம் கடிபட்டுள்ளனர். எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-உமாசங்கர், வேடசந்தூர்.
தூர்வாரப்படாத சாக்கடை கால்வாய்கள்
பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி எஸ்.கே.சி. நகரில் சாக்கடை கால்வாய்களை தூர்வாரி 3 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இதன் காரணமாக கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற முடியாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. அதில் கொசுப்புழுக்கள் உருவாவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராதாகிருஷ்ணன், நெய்க்காரப்பட்டி.
சான்றிதழ்கள் வழங்காமல் அலைக்கழிப்பு
பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் வருமானம், சாதி, குடியிருப்பு போன்றவற்றுக்கான சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படாமல் அலைக்கழிப்பு செய்யப்படுகின்றனர். இதனால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சான்றிதழ்கள் வழங்காமல் அலைக்கழிப்பு செய்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிபாரதி, பெரியகுளம்.
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
நிலக்கோட்டை தாலுகா புல்லக்காடுபட்டியில் இருந்து எத்திலோடு, சிலுக்குவார்பட்டி செல்லும் சாலையில் மூலக்கடை பகுதியில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், புல்லக்காடுபட்டி.
Related Tags :
Next Story