விசாரணைக்கு சென்ற போலீஸ் ஏட்டுவுக்கு அரிவாள் வெட்டு


விசாரணைக்கு சென்ற போலீஸ் ஏட்டுவுக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 11 Nov 2021 11:32 PM IST (Updated: 11 Nov 2021 11:32 PM IST)
t-max-icont-min-icon

விசாரணைக்கு சென்ற போலீஸ் ஏட்டுவை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்

ிருதுநகர்
விசாரணைக்கு சென்ற போலீஸ் ஏட்டுவை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
தகராறு 
விருதுநகர் அருகே உள்ள மன்னார்கோட்டையை சேர்ந்தவர் பால்பாண்டி. இவருடைய அண்ணன் ராஜூவின் மகன் குமார் (வயது 30). கூலித்தொழிலாளியான குமாருக்கும், பால்பாண்டிக்கும் நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து பால்பாண்டி இதுபற்றி வச்சக்காரப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனே கன்னிசேரிப் பகுதியில் இரவு ரோந்து பணியில் இருந்த வச்சக்காரப்பட்டி போலீஸ் ஏட்டு முருகனுக்கு(50) தகவல் தெரிவித்து மன்னார்கோட்டை கிராமத்திற்கு சென்று விசாரித்து வருமாறு அறிவுறுத்தினர். 
விசாரணை 
அதன்பேரில் போலீஸ் ஏட்டு முருகன், தனது இருசக்கர வாகனத்தில் மன்னார்கோட்டைக்கு சென்றார். பஸ் நிறுத்தத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு விசாரணைக்கு சென்றபோது கூலி தொழிலாளி குமார் தெருவில் தெருவில் நின்று ரகளை செய்து கொண்டிருந்தார். 
அவரைச் சுற்றிலும் கிராம மக்கள் கூடியிருந்தனர். ஏட்டு முருகன் முதலில் பால்பாண்டி மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தியபின் குமாரிடம் சென்று இரவு நேரமாகி விட்டதால் வீட்டுக்கு செல்லுமாறும், காலையில் இருவரும் போலீஸ் நிலையத்திற்கு வருமாறும் தெரிவித்தார். மேலும் அங்கு கூடியிருந்த கிராம மக்களையும் வீட்டுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார்
அரிவாள் வெட்டு
இதனை தொடர்ந்து வீட்டுக்குச் சென்ற குமார் திடீரென வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து ஏட்டு முருகனை அவதூறாக பேசியதுடன் அவரை அரிவாளால் வெட்டினார். ஏட்டு முருகன் தடுத்தபோது அவரது கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. 
இதனைத் தொடர்ந்து அவரை மேலும் வெட்ட முயற்சித்தபோது ஏட்டு முருகன் குனிந்து தப்பித்தார். உடன் அங்கிருந்த கிராம மக்கள் குமாரை பிடிக்க முயன்றனர். அப்போது அவர்களையும் மிரட்டி விட்டு அரிவாளை வீசி எறிந்துவிட்டு குமார் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
கைது 
இச்சம்பவம் பற்றி வச்சக்காரப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவம் நடந்த கிராமத்திற்கு விரைந்து வந்து வெட்டுப்பட்ட ஏட்டு முருகனை உடனடியாக சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஏட்டு முருகன் கொடுத்த புகாரின் பேரில் கூலி தொழிலாளி குமார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Next Story