பாம்பனில் திடீரென அமைதியான கடல்


பாம்பனில் திடீரென அமைதியான கடல்
x
தினத்தந்தி 11 Nov 2021 11:57 PM IST (Updated: 11 Nov 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

வங்க கடலில் புயல் சின்னம் உருவான நிலையில் பாம்பனில் கடல் திடீரென அமைதியானது. இது மீனவர்களிடையே பெரும் பீதிைய ஏற்படுத்தியது.

ராமேசுவரம்,

வங்க கடலில் புயல் சின்னம் உருவான நிலையில் பாம்பனில் கடல் திடீரென அமைதியானது. இது மீனவர்களிடையே பெரும் பீதிைய ஏற்படுத்தியது.

புயல் எச்சரிக்கை கூண்டு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே பரவலாக நல்ல மழை பெய்து வருகின்றது.வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை தொடர்ந்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 2-வது நாளாக நேற்றும் 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. வழக்கமாக இந்த வடகிழக்கு பருவமழை சீசன் காலங்களில் பாம்பன் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவது வழக்கம்.

அமைதியான கடல்

அது போல் கடந்த 3 நாட்களாகவே பாம்பனில் கடல் சீற்றமாக இருந்த நிலையில் புயல் சின்னம் மாமல்லபுரம் அருகே கரையை கடந்த நிலையிலும் பாம்பன் கடல் நேற்று சீற்றம் இல்லாமல் கடல்நீரில் எந்த அசைவும் இல்லாமல் இருந்தது மீனவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.புயல் சின்னம் கடலில் உள்ள போது கடல் சீற்றமாக இருந்தால் கூட பயம் இல்லை எனவும் கடல் அமைதியாக இருந்தால் தான் திடீரென ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை தொடர்ந்து 4-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல விதிக்கப்பட்ட தடை காரணமாக ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் 800-க்கும் அதிகமான விசைப்படகுகள் மற்றும் 500-க்கும் அதிகமான நாட்டுப்படகுகளும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
ஆனால் பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் கரையோரத்தில் மீன்பிடிக்க கூடிய சிறிய வித்தை மற்றும் பைபர் படகு, சிறிய நாட்டுப்படகுகள் நேற்று மீன் பிடிக்க சென்றன.

Next Story