பார்த்தீனியச் செடிகளை கட்டுப்படுத்த களைக்கொல்லிகளை பயன்படுத்தும் விவசாயிகள்


பார்த்தீனியச் செடிகளை கட்டுப்படுத்த களைக்கொல்லிகளை பயன்படுத்தும் விவசாயிகள்
x
தினத்தந்தி 11 Nov 2021 11:59 PM IST (Updated: 11 Nov 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

குடிமங்கலம் பகுதியில் பார்த்தீனியச் செடிகளை கட்டுப்படுத்த. விவசாயிகள் களைக்கொல்லிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

குடிமங்கலம்
குடிமங்கலம் பகுதியில் பார்த்தீனியச் செடிகளை கட்டுப்படுத்த. விவசாயிகள் களைக்கொல்லிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
களைக்கொல்லிகள்
உடுமலை குடிமங்கலம் வட்டாரங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதிகளில் தக்காளி, பீட்ரூட், சின்னவெங்காயம், காய்கறிப் பயிர்கள், தென்னை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில் விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. இதனால் மாற்று வழி தேடவேண்டிய கட்டாயநிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து உழவு முதல் அறுவடை வரை அனைத்து பணிகளும் படிப்படியாக எந்திரமயமாக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் பயிர்களுக்கு கிடைக்க வேண்டிய நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை பங்கிட்டு பயிர் வளர்ச்சியை கட்டுப்படுத்தி மகசூல் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய களைகளை கட்டுப்படுத்துவதும் விவசாயிகளுக்கு சவாலான விஷயமாக உள்ளது.
மாற்று வழி
களைகளை அகற்றுவதற்கு கூலி ஆட்கள் கிடைக்காததால் களைக் கொல்லிகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது அதிலும் விரைவாக கிளைத்து வளர்ந்து பிரதான பயிருக்குபாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பார்த்தீனியம் போன்ற களைகளை கட்டுப்படுத்துவது சவாலான விஷயமாகவே உள்ளது. எனவே சில விவசாயிகள் விரைவான பலன் வேண்டி விசைத்தெளிப்பான் மூலம் வீரியமிக்க ரசாயன களைக்கொல்லிகளை பயன்படுத்தி களைகளைக் கட்டுப்படுத்துகின்றனர். இதனால் மண்வளம் பாதிக்கப்படுவதுடன் நிலத்தடி நீர் மாசுபடும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். 
குடிமங்கலம் பகுதியில் புதிதாக நடவு செய்யப்பட்டுள்ள தென்னங்கன்றுகள் களைகளின் ஆக்கிரமிப்பால் பலவீனமடையும்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தென்னங்கன்றுகளை பிளாஸ்டிக்சாக்கு களால் மூடிவிட்டு களைக்கொல்லிகளை தெளிக்கின்றனர். எனவே களைக்கொல்லிகளால் மண்வளம் பாதிக்கப்படாமல் இருப்பதை தடுக்க எளிய முறையில் களைகளை கட்டுப்படுத்தும் வகையில் புதிய யுத்திகளை கண்டுபிடிக்க வேளாண் ஆராய்ச்சியாளர்களை அரசு ஊக்கப்படுத்த வேண்டும். அத்துடன் கூலித் தொழிலாளர்கள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Next Story