ஓச்சேரி அவளூர் பகுதியில்வெள்ள பாதிப்பு குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு


ஓச்சேரி அவளூர் பகுதியில்வெள்ள பாதிப்பு குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
x
தினத்தந்தி 11 Nov 2021 11:59 PM IST (Updated: 11 Nov 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

ஓச்சேரி மற்றும் அவளூர் பகுதியில் வெள்ள பாதிப்பு குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

காவேரிப்பாக்கம்

ஓச்சேரி மற்றும் அவளூர் பகுதியில் வெள்ள பாதிப்பு குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

நெற் பயிர்கள் சேதம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓச்சேரி, அவளூர் கிராமத்தில் உள்ள ஏரி நிரம்பியதன் காரணமாக அதன் கீழ் பகுதியில் உள்ள சுமார் 28 ஏக்கர் நிலப்பரப்பில் நெற் பயிர்கள் நீரில் முழ்கி சேதம் அடைந்துள்ளன. இப்பகுதிகளில் மாவட்ட வெள்ள கண்காணிப்பு அலுவலர் ஆர்.செல்வராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

மேலும் பருவ மழையினால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து வேளாண்மை துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சேதம் ஏற்பட்ட பகுதிகளிக்கு சென்று பார்வையிட்டு விவசாயிகளிடமும் சேதம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் மழையால் பாதிக்கப்பட்ட பயிற்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். 

இதனையடுத்து காவேரிப்பாக்கம் ஏரியின் பங்களா பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது ஏரியில் உள்ள தண்ணீர் இருப்பு குறித்து பொதுப்பணித் துறை அதிகாரியிடம் கேட்டறிந்தார். 
ஆய்வின் போது திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், வேளாண்மை துறை இணை இயக்குனர் வேலாயுதம், வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, பொதுப்பணித் துறை உதவி பொறியாளர்கள் சந்திரன், மெய்யழகன், வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம், துணை வேளாண்மை அலுவலர் சேகர் உள்பட பலர் உடனிருந்தனர்.

குடியிருப்புகளை நீர் சூழ்ந்தது

காவேரிப்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் சுற்றுவட்டாரத்தில் உள்ள மற்ற ஏரிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதில் பனப்பாக்கம் கல்லாற்றின் வழியாக தென்மாம்பாக்கம் ஏரிக்கு நீர் செல்லும் பாதையில் உள்ள தரைபாலம் மூழ்கி சுமார் 2 அடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது.

பனப்பாக்கம் கல்லாற்றிலிருந்து பல்வேறு வரத்து கால்வாய்கள் மூலம் செல்லும் நீர், கால்வாயை தூர்வாராததால் நீர் செல்லமுடியாமல் அடைப்பு ஏற்பட்டு கால்வாயிலிருந்து நீர் வெளியேறி பனப்பாக்கம் காலனி பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த அரக்கோணம் கோட்டாட்சியர் சிவதாஸ் நேரில் சென்று பார்வையிட்டு அடைப்புகளை விரைவில் சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் பனப்பாக்கம் பேரூராட்சியில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிகமாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பொக்லைன் எந்திரத்தின் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. 
ஆய்வின் போது நெமிலி தாசில்தார் ரவி, வருவாய் ஆய்வாளர் மருதாச்சலம், பனப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் குமார், கிராமநிர்வாக அலுவலர் டோமேசன் மற்றும் ராஜசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story