மனநலம் பாதிப்பட்டு குணமடைந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்படும். கலெக்டர் அமர்குஷ்வாஹா தகவல்


மனநலம் பாதிப்பட்டு குணமடைந்தவர்களுக்கு  வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்படும். கலெக்டர் அமர்குஷ்வாஹா தகவல்
x
தினத்தந்தி 12 Nov 2021 12:00 AM IST (Updated: 12 Nov 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

மனநலம் பாதிப்பட்டு குணமடைந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்படும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.

திருப்பத்தூர்

மனநலம் பாதிப்பட்டு குணமடைந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்படும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.

பராமரிப்பு இல்லம்

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் மனநல நிறுவனத்தின் கிழ் மனநலம் பாதிக்கபட்டவர்கள் மற்றும் குணமடைந்தவர்களை சமுதாயத்தில் ஒன்றிணைப்பதற்கு ஏதுவாக 700 பேர் பயன்பெறும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இடைநிலை பராமரிப்பு இல்லங்கள் தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் இடைநிலை பராமரிப்பு இல்லம் நடத்துவதற்கு திருப்பத்தூரில் எஸ்.ஆர்.டி.பி.எஸ். தொண்டு நிறுவனத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்பேரில் இடைநிலை பராமரிப்பு இல்லம் தொடக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் அம்ர்குஷ்வாஹா தலைமை தாங்கி, இடைநிலை பராமரிப்பு இல்லத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைத்து, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

வேலைவாய்ப்பு

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களை பராமரித்தல் மற்றும் அவர்களுக்கு தேவையான தொழிற்பயிற்சி வழங்கி அவர்களை மீண்டும் சமுதாயத்தோடு ஒன்றிணைப்பது இடைநிலை பராமரிப்பு இல்லத்தின் பணியாகும். இங்குள்ளவர்களுக்கு தையல் பயிற்சி, வயர் கூடை பின்னுதல், கைவினைப்பொருட்கள் செய்தல் போன்ற பயிற்சிகள் வழங்கி சுயமாக தொழில் செய்து சம்பாதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 வெளியில் சென்று வேலை செய்யக்கூடிய அளவிற்குள்ளானவர்களுக்கு திருப்பத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஊதுபத்தி, ஷூ தொழிற்சாலை, ஓட்டல் போன்ற இடங்களில் வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்படும். மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள் மாதத்தில் ஒரு நாள் ஒரு மணி நேரம் இந்த இடைநிலை பராமரிப்பு இல்லத்திற்கு வருகை புரிந்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். 
நான் எனது குடும்பத்துடன் ஒரு நாள் இந்த இடைநிலை பராமரிப்பு இல்லத்திற்கு வந்து அவர்களுடன் மதிய உணவு அருந்துவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

தையல் கற்றுக்கொடுத்த கலெக்டர்

அதைத்தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு தையல் பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்து எவ்வாறு தையல் தைப்பது என்று தையல் எந்திரத்தை இயக்கி கற்று கொடுத்தார்.
விழாவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கவிதா தண்டபாணி, துணை இயக்கனர் டாக்டர் மணிமேகலை, மாவட்ட மனநல மருத்துவர் சிவாஜிராவ், டாக்டர் பிரபவரணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் எஸ்.ஆர்.டி.பி.எஸ். இயக்குனர் தமிழரசி நன்றி கூறினார்.

Next Story