வேலூரில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
வேலூரில் நேற்று பெய்த மழையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.
வேலூர்
வேலூரில் நேற்று பெய்த மழையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.
மரம் சாய்ந்தது
வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக முன்எச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. வேலூர் நகரிலும் மழை பெய்தது. காலையில் சாரல் மழை பெய்தது. மதியவேளையில் மழையின் வேகம் அதிகரித்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த மழையின் காரணமாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் பின்புறம் நின்றிருந்த மரம் சாய்ந்தது. அருகில் இருந்த கேண்டீன் மீது மரக்கிளைகள் விழுந்தது. கோட்டை சுற்றுச்சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியது. சாலைகள் மோசமாக உள்ளதால் அந்த சாலை வழியாக செல்பவர்கள் அவதிப்பட்டனர்.
வெளுத்து வாங்கியது
மாலை 3.30 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. இந்த மழை 4 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்தனர். நகர் முழுவதும் மழைநீர் தேங்கியது. இந்த மழை விடிய, விடிய தொடர்ந்து பெய்தது. இதனால் நகரில் உள்ள நிக்கல்சன் கால்வாய் உள்பட அனைத்து கால்வாய்களிலும் மழைநீர் கழிவுநீருடன் கலந்து பெருக்கெடுத்து ஓடியது.
கன்சால்பேட்டை, திடீர்நகர், கொணவட்டம், மாங்காய் மண்டி அருகே சக்திநகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பல்வேறு குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள்ளேயும் தண்ணீர் புகுந்தது. இதில் கொணவட்டம் ரகீம்சாதிக் தெருவில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் மழைநீர் மற்றும் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்தது.
கலெக்டர் ஆய்வு
அரியூர் உமாபதிநகர், திருவள்ளுவர்நகர், பெரியசித்தேரி, குமரன்நகர், சித்தேரி, தென்றல்நகர், ஆர்.என்.பாளையம், சதுப்பேரி, வசந்தம் நகர் போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்கி இருந்தது. இப்பகுதிகளில் உள்ள கால்வாயை தூர்வாரி நடவடிக்கை எடுக்க கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டிருந்தார். அந்த பகுதியில் மேற்கொண்டிருந்த பணிகளை நேற்று அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கால்வாயில் குப்பைகள் கொட்டக்கூடாது என மக்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார். அம்முண்டி ஏரி நீர் செல்லும் கால்வாயை பார்வையிட்டார்.
மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திரா தடுப்பணையை தாண்டி பாலாற்றில் ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது. இதுதவிர கவுண்டன்ய ஆறு, அகரம் ஆறு, மலட்டாறு ஆகியவற்றில் தண்ணீர் பாய்ந்தோடுகிறது.
வெள்ளப்பெருக்கு
பாலாற்றில் 4 ஆயிரத்து 200 கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆந்திராவில் பெய்த கனமழை காரணமாக பொன்னை ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 2 நாட்களாக இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் வந்தது. ஆனால் நேற்று காலை இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. 1,500 கன அடி தண்ணீர் மட்டுமே வந்தது.
கனமழை காரணமாக நேற்றைய காலை நிலவரப்படி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 101 ஏரிகளில் 56 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. ஊரக பகதிகளில் உள்ள 133 ஏரிகளில் 40 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. மேலும் ஊரக பகுதிகளில் உள்ள 807 குளம், குட்டைகளில் 220 குளங்கள் நிரம்பி உள்ளன. 99 குளங்களில் 75 சதவீதத்துக்கு மேல் தண்ணீர் உள்ளது.
காட்பாடி
காட்பாடியை அடுத்த கிளித்தான்பட்டறை பகுதியில் கயிறு திரிக்கும் தொழில் செய்து வருபவர்களின் குடிசைகளை மழை நீர் சூழ்ந்தது. இதனால் அவர்கள் நேற்று இரவு அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு வருவாய்த்துறை சார்பில் பாய், போர்வைகளை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி வழங்கினார். அவர்களுக்கு இரவு நேர உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வேலூர் உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா, மாநகராட்சி கமிஷனர் சங்கரன், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் ஆனந்தன், தி.மு.க பகுதி செயலாளர் வன்னியராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story