பள்ளிக்கூடத்தை வெள்ளம் சூழ்ந்தது
மூலைக்கரைப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக பள்ளிக்கூடத்தை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் திரும்பிச்சென்றனர்.
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக பள்ளிக்கூடத்தை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் திரும்பிச்சென்றனர்.
பலத்த மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இயல்பான அளவைவிட இந்த ஆண்டு அதிக அளவு மழை பெய்ததால் மாநிலத்தின் பல மாவட்டங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதேபோல் நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக சாரல் மழை அவ்வப்போது பெய்து வருகிறது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த மழை பெய்தது. அதன் சுற்றுவட்டார கிராமங்களான சிந்தாமணி, முனைஞ்சிப்பட்டி, கூந்தன்குளம், நாகல்குளம், பருத்திப்பாடு உள்ளிட்ட இடங்களிலும் மழை கொட்டியது.
வெள்ளம் சூழ்ந்தது
இந்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. நள்ளிரவு பெய்த கனமழையால் மூைலக்கரைப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கூடத்தை வெள்ளம் சூழ்ந்தது.
5-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சுமார் 430 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 7 ஆசிரிய-ஆசிரியைகள் பணியாற்றுகிறார்கள். நேற்று காலையில் வழக்கம்போல் மாணவ, மாணவிகளும், ஆசிரிய-ஆசிரியைகளும் பள்ளிக்கு வந்தனர்.
அப்போது பள்ளிக்கூடத்தை வெள்ளம் சூழ்ந்து இருப்பதை கண்டனர். இதனால் வகுப்பறைகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இதைத்தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்படுவதாக பள்ளி தலைமை ஆசிரியை கதீஜா மெஹர் பானு அறிவித்தார். இதையடுத்து மாணவ, மாணவிகள் வீடுகளுக்கு திரும்பிச்சென்றனர். ஆசிரியர்கள் மட்டும் பள்ளியில் இருந்தனர்.
பொதுமக்கள் கோரிக்கை
இந்த நிலையில் பள்ளியில் மழைவெள்ளம் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி பொதுமக்கள் கூறியதாவது:-
மூலைக்கரைப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 430 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் இங்கு வந்து படிக்கின்றனர். கொரோனாவுக்கு பிறகு தற்போது பள்ளி திறக்கப்பட்டு மாணவர்கள் பாடம் படித்து வருகிறார்கள். இந்தநிலையில் மழை காரணமாக பள்ளிக்கூடத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் திரும்பி விட்டனர்.
எனவே, அதிகாரிகள் இதில் நடவடிக்கை எடுத்து பள்ளி வளாகத்தில் மழைவெள்ளம் சூழாதபடியும், மழையால் மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிகாரிகள் பார்வையிட்டனர்
இதற்கிடையே தொடக்கப்பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கியதை அறிந்த நாங்குநேரி தாசில்தார் இசக்கிபாண்டி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கிஷோர்குமார், வருவாய் ஆய்வாளர் ராமச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர்கள் செண்பகாதேவி, ஜாகீர்உசேன் ஆகியோர் அங்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம், பள்ளி வளாகத்திற்குள் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story