ஓடும் பஸ்சில் கண்டக்டருக்கு சரமாரி வெட்டு


ஓடும் பஸ்சில் கண்டக்டருக்கு சரமாரி வெட்டு
x
தினத்தந்தி 12 Nov 2021 12:57 AM IST (Updated: 12 Nov 2021 12:57 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் பஸ்சில் கண்டக்டரை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

களக்காடு:

நெல்லையில் இருந்து நேற்று முன்தினம் இரவில் சிங்கிகுளம் வழியாக களக்காட்டிற்கு ஒரு தனியார் பஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அதில் கண்டக்டராக சின்னச்சாமி (வயது 30) என்பவர் பணியாற்றினார்.

அந்த பஸ்சில் சிங்கிகுளத்தை சேர்ந்த துரைப்பாண்டியன் (29) என்பவரும் பயணம் செய்தார். சமையல் தொழிலாளியான அவர் பஸ்சின் படிக்கட்டில் நின்றவாறு பயணம் செய்தார். இதை பார்த்த பஸ் கண்டக்டர் சின்னச்சாமி, துரைப்பாண்டியனை பஸ்சிற்குள் வருமாறு அழைத்தார். ஆனால் துரைப்பாண்டியன் வர மறுத்து, கண்டக்டருடன் தகராறில் ஈடுபட்டார். 

இந்தநிலையில் பஸ் சிங்கிகுளத்திற்கு வந்தது. அப்போது துரைப்பாண்டியனுக்கும், கண்டக்டர் சின்னச்சாமிக்கும் இடையே தகராறு முற்றியது.
இதில் ஆத்திரம் அடைந்த துரைப்பாண்டியன் திடீரென தான் வைத்திருந்த அரிவாள் மனையால் சின்னச்சாமியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் சின்னச்சாமி படுகாயம் அடைந்தார். இதைப்பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பயணிகள், சின்னச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைப்பாண்டியனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story