15 ஆண்டுகளாக நிரம்பாத அ.நாட்டாமங்கலம் ஏரி
15 ஆண்டுகளாக நிரம்பாத அ.நாட்டாமங்கலம் ஏரி
சேலம், நவ.12-
அயோத்தியாப்பட்டணம் அருகே 15 ஆண்டுகளாக அ.நாட்டாமங்கலம் ஏரி நிரம்பவில்லை. மேலும் எஸ்.பாலம் ஏரியும் தண்ணீர் இல்லாமல் வானம் பார்த்த பூமியாக காட்சி அளிக்கிறது.
அ.நாட்டாமங்கலம் ஏரி
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்அடைந்து இருக்கிறது. இந்த மாதம் தொடங்கியதில் இருந்து தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சேலம் மாவட்டத்திலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த மழையால் சேலம் மாவட்டத்தில் உள்ள பல ஏரிகள் நிரம்பி வருகின்றன.
அயோத்தியாப்பட்டணம் அருகில் உள்ள அ.நாட்டாமங்கலம் ஏரி சுமார் 120 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி கடந்த 2005-ம் ஆண்டு நிரம்பியது. அக்ரஹாரம் நாட்டாமங்கலம், சர்க்கார் நாட்டாமங்கலம், ஏரி புதூர். ஜலகண்டாபுரம், மின்னாம்பள்ளி ஆகிய பகுதிகளுக்கு பிரதான நீர் ஆதாரமாகவும் இந்த ஏரி இருந்து வந்துள்ளது.
15 ஆண்டுகளாக...
இந்த ஏரி கடந்த 15 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் கருவேல மரங்கள் வளர்ந்து காடு போன்று காட்சி அளிக்கிறது. இந்த ஏரி தண்ணீர் இல்லாமல் காட்சி அளிப்பதற்கு ஏரியில் வளர்ந்து கிடக்கும் கருவேல மரங்களும், மலைப்பகுதியில் இருந்து வரும் நீர்வழி ஆக்கிரமிப்புகளும்தான் காரணம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
எனவே 15 ஆண்டுகளாக நிரம்பாத இந்த ஏரியில் உள்ள கருவேல மரங்களை அகற்றுவதுடன், ஏரியில் தண்ணீரை நிரப்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.பாலம் ஏரி
ஆட்டையாம்பட்டி அருகே சேலம் செல்லும் பாதையில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் எஸ்.பாலம் ஏரி உள்ளது. கஞ்சமலை அடிவாரம் சடையாண்டி ஊத்து என்ற பகுதியில் இருந்து வரும் மழைவெள்ளம் கடத்தூர் பகுதியில் உள்ள ஏரிகளை நிரப்புகிறது. ஆனால் இந்த பகுதியில் எஸ்.பாலம் ஏரி மட்டும் இன்னும் நிரம்பாமல் வானம் பார்த்த பூமியாக காட்சி அளிக்கிறது.
இந்த ஏரிக்கு தண்ணீர் வரும் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. தூர்வாரப்படாமல் முட்செடிகள்ா வளர்ந்து கிடக்கிறது. எனவே இந்த ஏரியை ஆழப்படுத்தவும், தண்ணீர் வரும் நீர்வழிப்பாதையை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எஸ்.பாலம் ஏரி நிரம்பினால் இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். எனவே எஸ்.பாலம் ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Related Tags :
Next Story