பேரூராட்சி, நகராட்சி தேர்தல் பணிகளை அ.தி.மு.க.வினர் உடனே தொடங்க வேண்டும்
பேரூராட்சி, நகராட்சி தேர்தல் பணிகளை அ.தி.மு.க.வினர் உடனே தொடங்க வேண்டும்
ஓமலூர்,நவ.12-
சேலம் மாவட்டத்தில் பேரூராட்சி, நகராட்சி தேர்தல் பணிகளை அ.தி.மு.க.வினர் உடனே தொடங்க வேண்டும் என்று ஓமலூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.
ஆலோசனை கூட்டம்
ஓமலூர் பைபாஸ் ரோட்டில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற இருக்கிற பேரூராட்சி, நகராட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஓமலூர் எம்.எல்.ஏ. மணி தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செம்மலை, மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், சந்திரசேகர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜமுத்து (வீரபாண்டி), சுந்தரராஜன் (சங்ககிரி), சித்ரா (ஏற்காடு), ஜெயசங்கரன் (ஆத்தூர்), நல்லதம்பி (கெங்கவல்லி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எடப்பாடி பழனிசாமி
கூட்டத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, பேரூராட்சி, நகராட்சி தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
பேரூராட்சி, நகராட்சி தேர்தல் பணிகளை கட்சி நிர்வாகிகள் உடனே தொடங்க வேண்டும். பேரூராட்சி தேர்தலில் கட்சிக்கு விசுவாசமானவர்களை தேர்வு செய்து போட்டியிட செய்ய வேண்டும்.
நாம் கூட்டுறவு தேர்தலில் முழுமையாக வெற்றி பெற்றுள்ளோம். அதேபோன்று சேலம் மாவட்டத்தில் அனைத்து பேரூராட்சி, நகராட்சிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். தி.மு.க. அரசு கூறிய எந்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.
வாக்கு சேகரிக்க வேண்டும்.
அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களைத்தான் இப்போது தொடங்கி வைக்கின்றனர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றனர். ஆனால் இதுவரை எந்தவொரு நகைக்கடனும் தள்ளுபடி செய்யப்படவில்லை. இதுபோன்றவற்றை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பல்பாக்கி கிருஷ்ணன், வெற்றிவேல், ஒன்றிய செயலாளர்கள் அசோகன் (ஓமலூர் வடக்கு), ராஜேந்திரன் (ஓமலூர் மேற்கு), கோவிந்தராஜ் (ஓமலூர் தெற்கு), சேரன்செங்குட்டுவன் (காடையாம்பட்டி மேற்கு), சுப்பிரமணியம் (காடையாம்பட்டி கிழக்கு), மணிமுத்து (தாரமங்கலம் வடக்கு), நகர செயலாளர்கள் சரவணன் (ஓமலூர்), கோவிந்தசாமி (கருப்பூர்), கணேசன் (காடையாம்பட்டி) மற்றும் சேலம் புறநகர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்
தொடர்ந்து, முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை விட்டுக்கொடுத்த தி.மு.க. அரசை கண்டிப்பது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் பணிகளில் அ.தி.மு.க.வினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
மேட்டூர் அணை உபரிநீரை சேலம் மாவட்டத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு வழங்காத தி.மு.க. அரசை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story