மரவள்ளி கிழங்கு விவசாயிகள் போராட்டம்
மரவள்ளி கிழங்கு விவசாயிகள் போராட்டம்
தலைவாசல், நவ.12-
சேகோ ஆலைகளை திறக்க வலியுறுத்தி தலைவாசல் அருகே மரவள்ளி கிழங்கு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையால் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது.
சேகோ ஆலைகள்
சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல் தாலுகாவுக்கு உட்பட்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட சேகோ தொழிற்சாலைகள் உள்ளன. இதில் தற்போது 200 சேகோ ஆலைகள் மட்டும் இயங்கி வருகின்றன. மீதமுள்ள ஆலைகள் கடந்த 10 நாட்களாக இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த மரவள்ளி கிழங்கை அறுவடை செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மரவள்ளி கிழங்கை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மூடப்பட்டுள்ள சேகோ ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம்
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை 11 மணி அளவில் தலைவாசல் அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஏரியூர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். அப்போது 3 லாரிகளில் மரவள்ளி கிழங்கை கொண்டு வந்து சாலையில் கொட்ட முயன்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவாாத்தை நடத்தி தடுத்து நிறுத்தினர்.
இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்தவுடன் தலைவாசல் தாசில்தார் சுமதி, சேலம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொற்செழியன், மண்டல துணை தாசில்தார் காத்தமுத்து, தலைவாசல் வருவாய் ஆய்வாளர் கனிமொழி ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சாலைமறியல்
பேச்சுவார்த்தையில் சமாதானம் அடையாத விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகளும், போலீசாரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதால் விவசாயிகள் சாலைமறியலை கைவிட்டனர். ஆனாலும் தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர்.
உடனே ஆத்தூர் உதவி கலெக்டர் சரண்யா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவரை முற்றுகையிட்ட விவசாயிகள், கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்படி வலியுறுத்தினர். அவர்களிடம் உதவி கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் போது அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கொள்முதல் செய்ய நடவடிக்கை
தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் மரவள்ளி கிழங்கை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சேகோ ஆலைகள் நாளை (அதாவது இன்று) முதல் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். சேகோ ஆலை நிர்வாகிகளிடம் கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகளிடம் உறுதி அளிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் சேலம், நாமக்கல், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விவசாயிகள் இந்த போராட்டத்தில் அந்த பகுதியே பலமணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story