கோவில்களில் கும்பாபிஷேக விழா
கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம் காளியம்மன் நகரில் விநாயகர், மங்கள மாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனியாக புதிதாக கோவில்கள் கட்டப்பட்டன. இதையடுத்து அந்த கோவில்களுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில் பல்வேறு பூஜைகளுடன், முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை பல்வேறு பூஜைகளுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து கடம் புறப்பாடாகி, புனித நீரை மங்கள மாரியம்மன் கோவில் கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்து, குருக்கள்கள் தீபாராதனை காட்டினர். அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர். அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து மங்கள மாரியம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது பக்தர்கள் அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து அருகே உள்ள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
இதேபோல் மங்களமேடு அருகே பொன்னகரம் கிராமத்தில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில் விநாயகர், நவநீதகிருஷ்ண பெருமாள், முருகர், கருப்பையா, அய்யனார் உள்ளிட்ட தெய்வங்கள் எழுந்தருளியுள்ளன. இந்த கோவில் மற்றும் மண்டபங்கள், பிரகாரம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் யாகசாலை பூஜை தொடங்கி நடந்தது. நேற்று கோபூஜை, யாத்திர தானம் உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடந்தன. பின்னர் யாகசாலையில் இருந்து வேத விற்பன்னர்கள் கலசங்களை சுமந்து கோவிலை வலம் வந்தனர். இதைத்தொடர்ந்து விமான கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story