குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி


குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி
x

ஜெயங்கொண்டத்தில் பல்வேறு பகுதிகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

ஜெயங்கொண்டம்:

தொடர் மழை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு முழுவதும் மழை பெய்தது. நேற்றும் மழை பெய்தது. தொடர் மழை காரணமாகவும், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மழைநீர் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட திடீர் குப்பம், மலங்கன்குடியிருப்பு, சீனிவாச நகர், புதுநகர், வேலாயுதம்நகர், விருத்தாச்சலம் ரோடு, கீழக்குடியிருப்பு, செங்குத்தபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சூழ்ந்ததாலும், சில இடங்களில் சிறு, சிறு சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சில வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், அந்த வீட்டை சேர்ந்தவர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் ஜெயங்கொண்டத்தில் திருச்சி- சிதம்பரம் ரோடு அருகே அய்யனார் கோவில் தெருவிற்கு செல்லும் பாதைக்கு முன்பாக உய்யகொண்டான் ஏரியில் இருந்து வெளியாகும் உபரிநீர் செல்ல வாய்க்கால் வசதி இல்லாததால், சாலை முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
வரத்து வாய்க்கால்கள்
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஏரியில் இருந்து உபரி நீர் செல்லும் வகையில் ஏரியில் இருந்து அய்யனார் கோவில் செல்லும் முகப்பு பாதைக்கு முன்பாக சாலையின் இருபுறமும் நீர் வரத்து வாய்க்கால்களை அமைக்க வேண்டும். மேலும் திருச்சி- சிதம்பரம் சாலையில் இருபுறமும் நீர்வரத்து வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் அமைக்க வேண்டும் என்று 8-வது வார்டு பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story