சாலைகளை சீரமைக்கக் கோரி எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. உண்ணாவிரதம்


சாலைகளை சீரமைக்கக் கோரி                      எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 12 Nov 2021 2:50 AM IST (Updated: 12 Nov 2021 2:50 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில், 
நாகர்கோவிலில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
உண்ணாவிரத போராட்டம்
நாகர்கோவில் மாநகரில் பாதாள சாக்கடை பணியாலும், குடிநீர் திட்ட பணியாலும் சாலைகள் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டன. இந்தநிலையில் அந்த சாலைகள் மழையால் அதிக அளவில் சேதமடைந்து விட்டன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என்று பா.ஜனதா சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பழுதான சாலைகளை சீரமைக்கக்கோரி பா.ஜனதா சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு காமராஜர் சிலை முன் 11-ந் தேதி (அதாவது நேற்று) காலை 10 மணி முதல் 13-ந் தேதி காலை 10 மணி வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. அறிவித்தார். ஆனால் அங்கு போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளிக்கவில்லை. எனினும் அறிவித்தபடி எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் காமராஜர் சிலை முன் நேற்று திரண்டனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
ஆனால் பாதுகாப்பு கருதி முன்னதாகவே அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததால் பா.ஜனதாவினர் அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு ஊர்வலமாக அண்ணா விளையாட்டு அரங்கம் நோக்கி வந்தனர். பின்னர் அங்கு எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. மற்றும் பா.ஜனதாவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தர்மராஜ், மாவட்ட பார்வையாளர் ஜோதி, மாநில செயலாளர் உமாரதி ராஜன், மாவட்ட பொருளாளர் முத்துராமன், மாநகர பார்வையாளர் தேவ், முன்னாள் நகராட்சி தலைவி மீனாதேவ், முன்னாள் மாவட்ட தலைவர்கள் முத்துகிருஷ்ணன், வேல்பாண்டியன், தர்மபுரம் கணேசன், பொதுச் செயலாளர்கள் சொக்கலிங்கம், வினோத், சுரேஷ் மற்றும் நாகராஜன், அஜித்குமார், சகாயம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
உண்ணாவிரத போராட்டம் காரணமாக அந்தபகுதி பரபரப்பாக காணப்பட்டது. இதை தொடர்ந்து நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாநகராட்சி என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், தாசில்தார் சேகர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அங்கு வந்து எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. 
பிப்ரவரி மாதத்துக்குள்
இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. இளநீர் குடித்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். பின்னர் சட்டசபை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறுகையில், “நாகர்கோவில் மாநகரில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தனக்கு வாக்களித்த மக்களுக்கு ஆதரவாக எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. போராட்டம் நடத்தினார். அவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனைத்து கோரிக்கைகளுக்கும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது” என்றார்.
பின்னர் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. கூறுகையில், "எங்களது போராட்டத்திற்கு செவிசாய்த்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிப்ரவரி மாதத்திற்குள் சாலைகள் அனைத்தும் முழுமையாக சீரமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளனர். எனவே போராட்டம் கைவிடப்பட்டுள்ளது" என்றார்.

Next Story