‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
விளாங்காடுபாக்கம்
சென்னை மாதவரம் தொகுதிக்குட்பட்ட விளாங்காடுபாக்கம் நியூ ஸ்டார் சிட்டி குடியிருப்பு பகுதி மழைவெள்ளத்தால் சூழப்பட்டு தனித்தீவாக காட்சி அளிக்கிறது. சுமார் 4 அடிக்கு மேல் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் ஒவ்வொரு மழைக்காலத்திலும் மிகுந்த சிரமத்தையும், அவஸ்தையும் அடைந்து வருகின்றனர். வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று கொடிய விஷ பாம்புகள், விஷ ஜந்துகள் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. இதனால் மக்கள் வெளியே வர பயந்து வீட்டுக்குள் முடங்கும் நிலை உள்ளது. இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
- தனிஷ், விளாங்காடுபாக்கம்.
கோட்டூர்புரம் பாரதி அவென்யூ
சென்னை கோட்டூர்புரம் பறக்கும் ரெயில் நிலையம் எதிரே அமைந்துள்ள கோட்டூர்புரம் 3-வது தெரு பாரதி அவென்யூ பகுதியில் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் நாங்கள் கடுமையான இன்னல்களை அனுபவித்து வருகிறோம். எனவே இப்பகுதியில் வெள்ளநீரை விரைந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கோட்டூர்புரம் பாரதி அவென்யூ மக்கள்.
கொரட்டூர் எல்லையம்மன் நகர்
சென்னை கொரட்டூர் எல்லையம்மன் நகர் முதல் மெயின் ரோடு 3-வது குறுக்குத் தெருவை சுற்றிலும் மழைவெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. வாகனங்களும் தண்ணீர் சிக்கி உள்ளன. எனவே மழைவெள்ள மீட்பு நடவடிக்கையில் இப்பகுதியிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.
- கொரட்டூர் எல்லையம்மன் நகர் மக்கள்.
புரசைவாக்கம் எஸ்.எஸ்.புரம்
சென்னை புரசைவாக்கம் எஸ்.எஸ்.புரம் 7-வது தெரு மற்றும் சுற்றி உள்ள பகுதிகள் ஏற்கனவே பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டு தவித்தது. அந்த தண்ணீர் வடிவதற்குள் தற்போது பெய்த கனமழையால் இப்பகுதி மீண்டும் மோசமான நிலையில் இருக்கிறது. இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வெள்ளநீர் வெளியேற்றும் பணியில் எங்களுடைய பகுதியையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- புரசைவாக்கம் எஸ்.எஸ்.புரம் பகுதி மக்கள்
மின்கம்பத்தில் விரிசல்
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அன்பு நகர் கல்பனா பள்ளி தெருவில் உள்ள மின்கம்பம் விரிசலுடன் உள்ளது. எப்போது வேண்டும் என்றாலும் விழுந்து விடும் நிலையில் இருக்கிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் இந்த ஆபத்தான மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை நட்டு தருவார்களா?
- அன்புநகர் மக்கள்.
மழைநீருடன் கழிவுநீர் கலப்பு
ஆவடி கன்னிகாபுரம் பகுதியில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தெருக்களில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகின்றன. குடியிருப்புகளுக்கும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. துர்நாற்றம் வீசி, நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் சூழ்ந்துள்ள தண்ணீரை விரைந்து வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
- ஆவடி கன்னிகாபுரம் மக்கள்.
சாய்ந்த தென்னை மரம்
கனமழை காரணமாக ஆலந்தூர் திருவள்ளுவர் நகர் முதல் தெருவில் உள்ள பழமையான தென்னை மரம் சாய்ந்து உள்ளது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து முடங்கி உள்ளது. எனவே இந்த மரத்தை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆலந்தூர் திருவள்ளுவர் நகர் மக்கள்.
கலங்கலாக வரும் குடிநீர்
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் சோகண்டி கிராமத்தில் இருளர் மக்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர் தொட்டியை முறையாக பராமரிக்காததால் தண்ணீர் கலங்கலாக வருகிறது. நீண்ட காலமாக நிலவும் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?
- செ.வினோத்குமார், சோகண்டி.
Related Tags :
Next Story