திருத்தணியில் குழந்தை இறந்து பிறந்ததால் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்ட உறவினர்கள்


திருத்தணியில் குழந்தை இறந்து பிறந்ததால் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்ட உறவினர்கள்
x
தினத்தந்தி 12 Nov 2021 11:54 AM IST (Updated: 12 Nov 2021 11:54 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை இறந்து பிறந்ததால் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தி்ல் ஈடுபட்டனர்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அகூர் கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பநாதன். இவரது மனைவி செம்பருத்தி. இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாக குழந்தை பிறக்கவில்லை. இந்த நிலையில் கர்ப்பம் அடைந்த செம்பருத்தியை இந்த மாதம் 6-ந்தேதி பிரசவத்திற்காக உறவினர்கள் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

நேற்று காலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் டாக்டர்கள் அவருக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது செம்பருத்திக்கு பிறந்த குழந்தை இறந்தே பிறந்ததாக கூறப்படுகிறது.

இதை அறிந்த செம்பருத்தியின் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாக்டரை அணுகி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாருக்கும் செம்பருத்தியின் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் திருத்தணி அரசு ஆஸ்பத்திரி பரபரப்பாக காணப்பட்டது. முறையான சிகிச்சை அளிக்காததால்தான் குழந்தை இறந்தே பிறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினார்கள். இது குறித்து தலைமை டாக்டர் ஆனந்தகுமாரிடம் செம்பருத்தியின் உறவினர்கள் புகார் கூறினார்கள்.

விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறவினர்களுக்கு உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு இறந்த குழந்தையின் உடலை பெற்றுக்கொண்டு வீட்டுக்கு சென்றனர்.

Next Story