திண்டுக்கல் மாநகராட்சியில் காந்தி மார்க்கெட் கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் ஏலம் அ.தி.மு.க.வினர் 2-வது நாளாக போராட்டம்


திண்டுக்கல் மாநகராட்சியில் காந்தி மார்க்கெட் கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் ஏலம் அ.தி.மு.க.வினர் 2-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 12 Nov 2021 7:35 PM IST (Updated: 12 Nov 2021 7:35 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாநகராட்சியில் காந்தி மார்க்கெட் கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் ஏலம் விடப்பட்டது. அப்போது அ.தி.மு.க.வினர் 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான காந்தி காய்கறி மார்க்கெட்டில் புதிதாக கட்டப்பட்ட 32 கடைகள் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த கடைகள் ஏலத்தில் பங்கேற்க தங்களுக்கு தடையில்லா சான்று வழங்கவில்லை என்று குற்றம்சாட்டி வியாபாரிகளும், அ.தி.மு.க.வினரும் நேற்று முன்தினம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களையும் ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கும்படி கோரிக்கை விடுத்தனர். ஆனால் தடையில்லா சான்று இல்லாததால் ஏலத்தில் பங்கேற்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து ஏலத்தை ரத்து செய்து விட்டு முறையாக அறிவித்து மற்றொரு நாளில் நடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வலியுறுத்தினார். இந்தநிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன், 32 கடைகளுக்கான ஏலம் நடைபெற்றது. இதையடுத்து அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வீரமார்பன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் மற்றும் வியாபாரிகள் திரண்டு வந்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் கமிஷனர் சிவசுப்பிரமணியனை சந்தித்து கடைகள் ஏலத்தை முறையாக நடத்தவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒருசிலர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதற்கிடையே 32 கடைகளுக்கான ஏலம் நடைபெற்று முடிந்தது. இதனால் அ.தி.மு.க.வினர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story