அய்யம்பாளையம் மருதாநதி அணையில் இருந்து வடக்கு, தெற்கு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட கோரிக்கை
அய்யம்பாளையம் மருதாநதி அணையில் இருந்து வடக்கு, தெற்கு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பட்டிவீரன்பட்டி:
பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையம் மருதாநதி அணையின் நீர்மட்டம் 72 அடியாகும். தற்போது அணையில் சுமார் 71 அடி வரை தண்ணீர் உள்ளது. தற்போது அணையின் பிரதான வாய்க்காலிருந்து வினாடிக்கு 500 கனஅடிவீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கூட்டாத்து அய்யம்பாளையம் சென்று, அங்கிருந்து வைகை ஆற்றில் கலந்து வீணாக கடலுக்கு செல்கிறது. ஆனால் இந்த அணையின் வடக்கு மற்றும் தெற்கு வாய்க்கால்களில் இந்த தண்ணீரை திறந்துவிட்டால், இப்பகுதி விவசாயிகள் பயனடைவார்கள். எனவே வடக்கு, தெற்கு வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மருதாநதி அணையின் முக்கிய பிரதான வாய்க்காலின் அருகே உள்ள தெற்கு வாய்க்காலின் நீளம் 9.86 கி.மீட்டர் தூரமாகும். வடக்கு வாய்க்காலின் நீளம் 10.05 கி.மீட்டர் தூரமாகும். ஆனால் இந்த 2 வாய்க்கால்களிலும் தண்ணீர் திறந்துவிடாத காரணத்தினால் செடிகள் முளைத்து தூர்ந்து போய்விட்டது. இந்த 2 வாய்க்கால்களை நம்பி இருந்த சுமார் 7 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் வானம் பார்த்த பூமியாக மாறிவிட்டது. இதனால் இந்த வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிட்டு, இப்பகுதியில் அழிந்து வரும் விவசாயத்திற்கு புத்துயிர்கொடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து பொதுப்பணித்துறையினரிடம் கேட்டபோது, வடக்கு, தெற்கு வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடும் ஷட்டர் பழுதாகியுள்ளது. அணையில் முழு கொள்ளளவில் தண்ணீர் உள்ளதால், பழுதை சரிசெய்ய முடியவில்லை. மேலும் இந்த வாய்க்கால்களை சீரமைத்து புதிதாக மாற்றியமைப்பதற்கு ரூ.20 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கியவுடன் பணிகள் தொடங்க உள்ளோம் என்றனர்.
Related Tags :
Next Story