அருணாசலேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 3ம் நாள் தீபத்திருவிழாவையொட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது. மேலும் கோவிலில் விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா நடந்ததை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 3ம் நாள் தீபத்திருவிழாவையொட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது. மேலும் கோவிலில் விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா நடந்ததை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
3-ம் நாள் தீபத் திருவிழா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 10-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நேற்று இரவில் கோவில் வளாகத்தில் பஞ்சமூர்த்திகள் உலா நடைபெற்றது.
தொடந்து 3-ம் நாள் விழாவை முன்னிட்டு இன்று காலை கோவிலில் விநாயகருக்கும், சந்திரசேகரருக்கும் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க விநாயகரும், சந்திரசேகரரும் கோவிலில் 3-ம் பிரகாரத்தில் வலம் வந்து அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு எழுந்தருளினர்.
அங்கிருந்து 5-ம் பிரகாரத்திற்கு கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் உள்ள வாகனங்களில் விநாயகரும், சந்திரசேகரரும் எழுந்தருளினர். பின்னர் சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அப்போது கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் திரண்டு நின்று வழிபட்டனர். பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலில் 5-ம் பிரகாரத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உலா நடைபெற்றது.
1008 சங்காபிஷேகம்
மேலும் 3-ம் நாள் விழாவையொட்டி கோவிலில் 1008 சங்காபிஷேகம் மற்றும் மகா யாகம் நடைபெற்றது. முன்னதாக 1008 சங்குகளில் புனித நீர் ஊற்றி சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
மகா யாகம் முடிந்த பிறகு புனித நீர் கொண்டு அருணாசலேஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது.
கோவிலில் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் கோவில் வளாகத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் இரவு சுமார் 9 மணியளவில் கோவில் வளாகத்தில் பஞ்சமூர்த்திகள் உற்சவ உலா நடைபெற்றது.
பிரார்த்தனை உண்டியல்
ஆண்டுதோறும் தீபத் திருவிழாவின் 3-ம் நாள் விழாவின் போது பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்துவதற்காக பிரார்த்தனை உண்டியல் வைக்கப்படும்.
அதன்படி 3-ம் நாள் விழாவான இன்று காலை கோவிலில் பிரார்த்தனை உண்டியல் கோவில் கொடி மரம் அருகில் வைக்கப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கை செலுத்தினர்.
Related Tags :
Next Story