நீர்வரத்து குறைந்ததால் வைகை அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு


நீர்வரத்து குறைந்ததால் வைகை அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு
x
தினத்தந்தி 12 Nov 2021 9:50 PM IST (Updated: 12 Nov 2021 9:50 PM IST)
t-max-icont-min-icon

நீர்வரத்து குறைந்ததால் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவானது வினாடிக்கு 2 ஆயிரத்து 652 அடியாக குறைக்கப்பட்டது.

ஆண்டிப்பட்டி:
நீர்வரத்து குறைந்ததால் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவானது வினாடிக்கு 2 ஆயிரத்து 652 அடியாக குறைக்கப்பட்டது. 
வைகை அணை
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது. 
இந்தநிலையில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது. நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடியாக இருந்தது. 
இதையொட்டி அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீரை திறந்துவிட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, அணையில் இருந்து பிரதான 7 மதகுகள் வழியாக வைகை ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது. அப்போது வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி வீதம் உபரிநீர் வெளியேறியது.  
தண்ணீர் திறப்பு குறைப்பு
தண்ணீர் திறக்கப்பட்ட போதிலும் நீர்வரத்து சீராக இருந்ததால் வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக நீடித்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தது. இதனால் நீர்வரத்தும் குறைந்தது. இதையொட்டி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அளவை குறைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். 
அதன்படி, நேற்று அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் அளவு வினாடிக்கு 2 ஆயிரத்து 652 கனஅடியாக குறைக்கப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 69.2 அடியாக உள்ளது. நீர்வரத்து 2 ஆயிரத்து 652 கன அடியாக உள்ளது. வைகை அணை இந்த ஆண்டில் மட்டும் 3 முறை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story