நந்தன் கால்வாய் திட்டம் விரைவில் முழுமையாக நிறைவேற்றப்படும்


நந்தன் கால்வாய் திட்டம் விரைவில் முழுமையாக நிறைவேற்றப்படும்
x
தினத்தந்தி 12 Nov 2021 10:45 PM IST (Updated: 12 Nov 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

நந்தன் கால்வாய் திட்டம் வெகு விரைவில் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியம் பனமலைப்பேட்டை ஊராட்சியில் தொடர் மழையின் காரணமாக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் நீர், அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனை நேற்று காலை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 1967-ல் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஏ.கோவிந்தசாமி அமைச்சராக இருந்தபோது நந்தன் கால்வாய் பணிக்கான திட்டத்தை தீட்டியிருக்கிறார். 1989-ல் தலைவர் கருணாநிதி, விழுப்புரம் வரும்போது இத்திட்டத்தை பற்றியும் அறிவித்தார். தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற நிதிநிலை அறிக்கையில் நந்தன் கால்வாய் திட்டத்திற்காக ரூ.237 கோடி ஒதுக்கியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது பனமலைப்பேட்டையில் இருந்து ரூ.25 கோடி மதிப்பில் பாசன வாய்க்கால்கள் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

நந்தன் கால்வாய் திட்டம்

இந்த நந்தன் கால்வாய் சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நந்தன் கால்வாய் திட்டம் வெகு விரைவில் முழுமையாக நிறைவேற்றப்படும். இதன் மூலம் சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட 22 ஏரிகளுக்கு வந்து அந்த ஏரிகள் நிரம்பி அதன் மூலமாக 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 5,500 ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்கள் பயன்பெறும்.
நிச்சயமாக இத்திட்டத்தை தமிழக முதல்-அமைச்சரும், நீர்வளத்துறை அமைச்சரும் செயல்படுத்துவார்கள். இதற்கு இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வும், நாங்களும் முழுமையாக ஒத்துழைப்பு அளித்து இப்பகுதி மக்களின் நீண்ட நாள் குறையை விரைவில் தீர்த்து வைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் டி.மோகன், எம்.எல்.ஏ.க்கள் நா.புகழேந்தி, டாக்டர் ஆர்.லட்சுமணன், காணை ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வி, மாவட்ட கவுன்சிலர் முருகன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாநில விவசாய அணி துணை செயலாளர் அன்னியூர் சிவா மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Next Story