விழுப்புரத்தில் 5 நாட்களுக்கு பிறகு தலைகாட்டிய சூரியன்


விழுப்புரத்தில் 5 நாட்களுக்கு பிறகு தலைகாட்டிய சூரியன்
x
தினத்தந்தி 12 Nov 2021 10:53 PM IST (Updated: 12 Nov 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

கடந்த 5 நாட்களாக விழுப்புரம் மற்றும் கிராம பகுதிகளை சூழ்ந்து இருந்த கருமேகங்கள் வழிவிட்ட நிலையில், சூரிய வெளிச்சம் நேற்று தலைகாட்டியது. வெயில் அடிக்க தொடங்கியதால், துணிகளை துவைத்து காயவைக்க இல்லத்தரசிகள் ஆர்வம் காட்டினர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 6-ந் தேதி நள்ளிரவு முதல் மறுநாள் காலை வரை விடிய விடிய அதி கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. 
அன்றைய நாளில் இருந்து விழுப்புரம், திண்டிவனம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்தே காணப்பட்டது. அதிலும் கடந்த 9-ந் தேதி வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது சென்னை அருகே நேற்று முன்தினம் மாலையில் கரையை கடந்தது. இந்த நிகழ்வுகள் காரணமாக மீண்டும் விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. 

மழை நின்றது

பெரும்பாலான தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடியது. அதுமட்டுமல்லாமல் பிரதான சாலைகள் தண்ணீரில் மூழ்கின. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 10-க்கும் மேற்பட்ட தரைப்பாலங்கள் மூழ்கடித்தபடி தண்ணீர் சென்றது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வீடுகளைச் சுற்றிலும் மழைநீர் சூழ்ந்ததால், பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.   தாழ்வு மண்டலம் சென்னை அருகே நேற்று முன்தினம் கரையை கடந்த நிலையில், மழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தால் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவில் இருந்து பெரிய அளவில் மழை இல்லை.

தலைகாட்டிய சூரியன்

இதே நிலை நேற்று காலையிலும் இருந்தது. லேசான மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதன்பிறகு காலை 8 மணியளவில் கருமேகங்கள் விலகி வழிவிட்டன. 5 நாட்களுக்கு பிறகு விழுப்புரம், திண்டிவனம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் சூரியன் நேற்று தலைகாட்டியது.
கடந்த சில நாட்களாக பகலிலேயே இருள் சூழ்ந்திருந்த நிலையில், நேற்று வெயில் அடிக்க தொடங்கியதும் பெரும்பாலான இல்லத்தரசிகள் துணிகளை துவைத்து காயவைக்க ஆர்வம் காட்டினர். அதேபோல் சலவைத் தொழிலாளர்களும் சலவைப் பணியில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது. சில இடங்களில் வெள்ளநீர் வீடுகள், கடைகளுக்குள் புகுந்ததில் ஆவணங்கள், புத்தகங்கள் தண்ணீரில் நனைந்துவிட்டன. அவற்றை உலரவைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டனர். 

Next Story