விருத்தாசலம் அருகே ஓடும் லாரியில் ரேஷன் பொருட்கள் கடத்தல்?
சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதால் பரபரப்பு
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த சேமிப்பு கிடங்கில் இருந்து ரேஷன் கடைகளுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படும் பொருட்களை வழியில் நிறுத்தி தனிநபர்களுக்கு ஊழியர்கள் விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று விருத்தாசலம் சேமிப்பு கிடங்கில் இருந்து ரேஷன் பொருட்களை ஏற்றி சென்ற லாரியை, கோட்டேரி செல்லும் வழியில் காணாதுகண்டான் கிராமத்தில் நிறுத்தி, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ரேஷன் பொருட்கள் அடங்கிய 2 மூட்டைகளை கடத்தி சென்றதாக தெரிகிறது.
இந்த காட்சிகளை அப்பகுதியை சேர்ந்த ஒருவர், தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலானதால் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, தவறு செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
Related Tags :
Next Story