அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டர் தற்கொலை
அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டர் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்
ராமநாதபுரம்,
அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டர் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெண் டாக்டர்
ராமநாதபுரம் இந்திராநகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய ஒரே மகள் சுகந்தா (வயது 31). இவர் தேவிபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்துள்ளார்.
சுகந்தாவுக்கும், சடையன்வலசையை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் மகன் டாக்டர் மகேசுவரனுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
இதன்பின்னர் மகேசுவரன் மேல்படிப்பிற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று விட்டார். இதனால் டாக்டர் சுகந்தா மட்டும் பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் டெல்லிக்கு மனைவியை அழைத்துச் சென்ற மகேசுவரன், கடந்த அக்டோபர் மாதம் சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். பின்னர் பெரியார் நகரில் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
விஷம் குடித்து தற்கொலை
இந்த சூழ்நிலையில் மீண்டும் பணிக்கு சென்ற டாக்டர் சுகந்தா, தன்னுடைய தாயார் சரசுவதியிடம் பேசியபோதெல்லாம், தன்னை கணவர் மகேசுவரன் வேலைக்கு செல்லக்கூடாது என்றும், மேல்படிப்பு படிக்கக்கூடாது என்றும் கூறி அடித்து கொடுமைப்படுத்துவதாக கூறி அழுததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி டாக்டர் சுகந்தா திடீரென விஷம் குடித்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அவருடைய பெற்றோர் ரவி- சரஸ்வதி உள்ளிட்டோர் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர்.
அங்கு டாக்டர் சுகந்தா, தனது கணவரின் கொடுமை தாங்க முடியாமல் விஷம் குடித்ததாக தன் பெற்றோரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுகந்தா நேற்று பரிதாபமாக இறந்தார்.
உறவினர்கள் திரண்டு வந்தனர்
எனவே தன் மகளின் சாவுக்கு காரணம் மருமகனான டாக்டர் மகேசுவரன்தான் என்றும், அவரை கைது செய்ய வேண்டும் எனக்கோரி சுகந்தாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டு ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை அழைத்து சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கைது
இதற்கிடையே சுகந்தாவின் தற்கொலை தொடர்பாக அவருடைய கணவர் மகேசுவரனை ேபாலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 ஆண்டுகளில் பெண் டாக்டர் தற்கொலை செய்தது தொடர்பாக ஆர்.டி.ஓ.வும் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.
-----
Related Tags :
Next Story