மழையில் சேதமான பயிர்களை அரசு செயலர் நேரில் ஆய்வு
மழையில் சேதமான பயிர்களை அரசு செயலர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது நிவாரணம் வழங்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்
சிவகங்கை
மழையில் சேதமான பயிர்களை அரசு செயலர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது நிவாரணம் வழங்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
கண்காணிப்பு அலுவலர்
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலர் லால்வேளா சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் சிவகங்கை ஊரக வளர்ச்சித்துறை அலுவலக வளாக கூட்டரங்கத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினார்.
கூட்டத்தில் தொடர்மழையின் போது ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்தும் அது தொடர்பாக ஒவ்வொரு துறை வாரியாக எடுக்கபட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கலெக்டர் விளக்கி கூறினார்.
அதை தொடர்ந்து, வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகள் மழைக்காலங்களில் முழுமையாக செயல்பட்டு பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணியாற்ற வேண்டும் என்று கண்காணிப்பு அலுவலர் ஆலோசனை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு .செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பார்வையிட்டார்
அதன் பின்னர் காளையார்கோவில் தாலுகா அல்லூர், பனங்காடியில் நடவு செய்யப்பட்ட நிலத்தில் மழைத்தண்ணீர் தேங்கி நெற்பயிர் முழுவதும் சேதமடைந்துள்ளதை கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டார்.
அதனைத்தொடர்ந்து திருப்பத்தூர் தாலுகா பட்டமங்கலம் ஊராட்சியில் பட்டத்தி கண்மாய் முழுக்கொள்ளளவை அடைந்து தண்ணீர் கால்வாயில் செல்வதையும், பெரிச்சிக்கோவில் ஊராட்சியில் மணிமுத்தாற்றிலிருந்து கால்வாய் வழியாக பொன்னாகுடி கண்மாய்க்கு தண்ணீர் செல்வதையும் பார்த்தார்.
நிவாரணம் வழங்க கோரிக்கை
அதனைத்தொடர்ந்து மானாமதுரை தாலுகாவுக்கு உட்பட்ட செய்குளத்தூர் சன்னதிபுதுக்குளம் மற்றும் கட்டிக்குளம் ஊராட்சிப்பகுதிகளில் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் சேதம் அடைந்துள்ளதையும் பார்த்தார். அப்போது விவசாயிகள் மழைநீரில் சேதமான நெற்பயிரை காண்பித்து தங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த ஆய்வில் மானாமதுரை தொகுதி தமிழரசி எம்.எல்.ஏ.வும் உடன் இருந்தார்.
பின்னர் கலெக்டர் கூறும் போது, தொடர் மழையால் சிவகங்கை மாவட்டத்தில் 116 எக்டர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் சன்னதிபுதுகுளம் பகுதியில் 20 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story