மனித உரிமை ஆணையம் 2-வது நாளாக விசாரணை
நெல்லையில் மனித உரிமை ஆணையம் 2-வது நாளாக விசாரணை நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக நெல்லை அரசு சுற்றுலா மாளிகையில் நேற்று 2-வது நாளாக வழக்கு விசாரணை நடந்தது. மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரணை நடத்தினார். அப்போது பலர், எங்களை போலீசார் அடித்து துன்புறுத்தி, பொய் வழக்கு போட்டனர் என்று கூறி நீதிபதி முன்பு அழுது, கண்ணீருடன் தெரிவித்தனர். நேற்று மட்டும் 38 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. பெரும்பாலான வழக்குகளில் போலீஸ் அதிகாரிகளே விசாரணைக்கு வந்திருந்தனர். இதனால் போலீசார் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் பாலப்பள்ளம் குட்டி சரள்விளையைச் சேர்ந்த ஜெர்லின் என்பவரிடம் தங்கப்புதையல் உள்ளதாக நினைத்து அவரை கடந்த 2019-ம் ஆண்டு சிலர் கடத்தி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில், கருங்கல் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்தேவி, அவருடன் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் ரூபன், ஏட்டு ஜஸ்டின் ஜோன்ஸ் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து நீதிபதி ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்தார். நேற்று நடந்த இந்த வழக்கு விசாரணையில், இன்ஸ்பெக்டர் ஆஜராகவில்லை. இதையடுத்து இந்த வழக்கு டிசம்பர் மாதம் 23-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Related Tags :
Next Story