சாமி சிலைகள் உடைப்பை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் சாலை மறியல்
சாமி சிலைகள் உடைப்பை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலின் உபகோவிலில் தொடர்ந்து சாமி சிலைகள் உடைக்கப்படுவதை கண்டித்து இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் மாரி தலைமையில், அக்கட்சியினர் நேற்று மதியம் சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோவில் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி, அகில இந்திய இந்து மகா சபாவின் மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் ராகுல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்கள், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் உபகோவிலில் சாமி சிலைகளை உடைத்த குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். கோவிலுக்கு பாதுகாப்பு கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்து வேனில் ஏற்றி, அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்களை போலீசார் மாலையில் விடுவித்தனர்.
இதற்கிடையே விசுவ இந்து பரிஷத்தின் மாநில அமைப்பாளர் சேதுராமன் தலைமையில், மாவட்ட செயலாளர் ஹரிகரன் மற்றும் அந்த அமைப்பினர் நேற்று சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலின் உபகோவிலில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டனர். அப்போது சேதுராமன் கூறுகையில், இந்த கோவிலுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும், என்றார்.
Related Tags :
Next Story