அமைச்சர்கள் குழு நேரில் ஆய்வு


அமைச்சர்கள் குழு நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 13 Nov 2021 1:45 AM IST (Updated: 13 Nov 2021 1:45 AM IST)
t-max-icont-min-icon

தொடர்மழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் அமைச்சர்கள் குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது.

தஞ்சாவூர்;
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.
 இந்தநிலையில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. 
7 அமைச்சர்கள் குழு
இந்த தொடர் மழையால் டெல்டா  மாவட்டங்களில் பயிரிடப்பட்டு இருந்த  சம்பா, தாளடி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதில் பல இடங்களில் நெற்பயிர்கள் அழுகி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத விவரங்களை பார்வையிட்டு அறிக்கை அளிக்கவும், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்திடவும் அமைச்சர்கள் குழுவை நியமித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகிய 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று டெல்டா மாவட்டங்களில் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்த நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்கூட்டம்
முன்னதாக அமைச்சர்கள் குழுவினர் காலை தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஆய்வுக்கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி விஜயகுமார் மற்றும் அரசு கொறடா கோவி.செழியன், எம்.பி.க்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், செ.ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன்,டி.கே.ஜி.நீலமேகம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் விவசாயிகளையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.
இந்த கூட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான முன்னேற்பாடு பணிகள் செய்வது, பாதுகாப்பு கருதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், சாலைகளில் எங்காவது மரங்கள் சாய்ந்து விழுந்தால் உடனுக்குடன் அப்புறப்படுத்துவது, வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வடிய வைக்கும் பணியை துரிதப்படுத்துவது என்பன உள்ளிட்ட  நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
நெற்பயிர்களை பார்வையிட்டனர்
பின்னர் அமைச்சர்கள் குழுவினர் தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே அண்டமி கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்கு பாதிப்பு விவரங்களை விவசாயிகளிடம் கேட்டறிந்து சேத விவரங்களை கணக்கெடுத்து குறித்துக்கொண்டனர்.
தொடர்ந்து மழையால் இடிந்து விழுந்த வீடுகள், தண்ணீர் தேங்கியுள்ள இடங்களை பார்வையிட்டு தேங்கியுள்ள தண்ணீரை உடனுக்குடன் வெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
 ஐ.பெரியசாமி பேட்டி
பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி நிருபர்களிடம் கூறுகையில், மதுக்கூர் வட்டாரத்தில் தொடர் மழையால் 3,700 எக்டேர் சம்பா பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. சேத விவரங்களை கணக்கு எடுத்துள்ளோம். அவற்றை முதல்-அமைச்சரிடம் அளிக்க உள்ளோம். வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கைகளை வேளாண்துறை அதிகாரிகள் மூலம் மேற்கொண்டுள்ளோம்.
மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவாமல் தடுப்பதற்காக தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதேபோல் விவசாய பணிகளுக்கு தங்கு தடையின்றி யூரியா உள்ளிட்ட எந்த வகை உரங்களும் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் உரங்களும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர்கள் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து பின்னர் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் ஆய்வு செய்தனர்.
பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம்
திருவாரூர் மாவட்டத்தில் பயிர் சேத விவரங்களை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி நிருபர்களிடம் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் கனமழையினால் 17 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சம்பா, தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் சம்பாவை விட தாளடி பயிர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் சேதம் குறித்தும், பயிர் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் உரங்கள் வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.
விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று பயிர் காப்பீடு செய்ய கால அவகாச நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம் என்றார். 

Next Story