வெள்ளத்தில் சிக்கிய 7 குடும்பங்கள் மீட்பு
ஆரல்வாய்மொழி அருகே வெள்ளத்தில் சிக்கிய 7 குடும்பங்களை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி அருகே வெள்ளத்தில் சிக்கிய 7 குடும்பங்களை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
பொய்கை அணை மறுகால்
ஆரல்வாய்மொழி அருகே உள்ள பொய்கை அணை நிரம்பி கடந்த சில நாட்களாக மறுகால் பாய்ந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் கால்வாய் வழியாக செண்பகராமன்புதூர் பெரியகுளத்திற்கு செல்கிறது.
இந்த நிலையில் நேற்று பெய்த மழையால் தண்ணீரின் அளவு அதிகரித்து கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் கல்லூரிக்குள் புகுந்து பல இடங்களில் சுற்றி இறுதியில் பெரியகுளத்தை அடைகிறது. தனியார் கல்லூரி அருகே வேதாந்திரி நகர் என்னும் குடியிருப்பு உள்ளது. இங்கு 24 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
பொய்கை அணையின் மறுகால் வெள்ளம் குடியிருப்பை சூழ்ந்ததும் 10 குடும்பத்தினர் வீட்டை காலி செய்து விட்டு உறவினர் வீடுகளுக்கு சென்று விட்டனர்.
7 குடும்பத்தினர் மீட்பு
மீதி உள்ள குடும்பத்தினர் தண்ணீர் சூழ்ந்து கொண்டதால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். இவர்களில் 7 குடும்பத்தினர் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் காணப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி பேரூராட்சி செயல் அலுவலர் ஜோஸ்லின் ராஜ், கோட்டாட்சியர் சேது ராமலிங்கம், தாசில்தார் தாஜ்நிஷா, கிராம நிர்வாக அலுவலர் ஹரி நயினார் பிள்ளை ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு 7 குடும்பங்களை சேர்ந்த 20 பேரை பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் உறவினர் வீடுகளிலும், பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். மீட்கப்பட்டவர்களில் 2 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story