ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது- ஐகோர்ட்டில் கர்நாடக அரசு உறுதி
அதிகாரிகள் அனுமதி அளித்தாலும் சட்டத்தை மீறி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று கர்நாடக ஐகோர்ட்டில், மாநில அரசு உறுதி அளித்துள்ளது.
பெங்களூரு:
ஆன்லைன் விளையாட்டுகள்
கர்நாடகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆன்லைன் விளையாட்டு விளையாடுபவர்களுக்கும் கடும் தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் கர்நாடக அரசின் உத்தரவுக்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி முன்பு நடந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் பிரபுலிங்கா நாவடகி, ‘‘மக்களின் விருப்பத்தின் பேரிலேயே ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சூதாட்டங்களுக்கு அரசு சார்பில் தடை விதிக்கப்பட்டது.
சூதாட்டத்திற்கு எதிரான சட்டம் கடந்த 1963-ம் ஆண்டு மாநில அரசால் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சூதாட்டங்கள் அதில் சேர்க்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. அதிகாரிகள் அனுமதி அளித்தாலும் புதிய சட்டங்களை மீறி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் மீது இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியும் சட்டத்தை மீறி எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது’’ என்று கூறினார்.
ஒத்திவைப்பு
இதையடுத்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் மானு சிங்வி, ‘‘ஆன்லைன் விளையாட்டுகள் 2 பிரிவுகளான உள்ளன. ஒன்று திறமை அடிப்படையிலும், 2-வது அதிர்ஷ்டத்தின் அடிப்படையிலும் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் திறமை அடிப்படையிலான ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. இது நீக்கப்பட வேண்டும்’’ என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி இவ்வழக்கின் விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Related Tags :
Next Story