காங்கிரஸ் பாதயாத்திரையில் தொண்டர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் - டி.கே.சிவக்குமார் வேண்டுகோள்
மேகதாது திட்டத்தை தொடங்க வலியுறுத்தி காங்கிரஸ் மேற்கொள்ளும் பாதயாத்திரையில் கட்சி தொண்டர்கள் அதிகளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சாதகமான அம்சங்கள்
பிட்காயின் முறைகேடு குறித்து நாங்கள் தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறோம். ஆனால் இதை ஆளும் பா.ஜனதா அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. இந்த முறைகேட்டை மூடிமறைக்க அரசு முயற்சி செய்கிறது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா ஆகியோர் இதுகுறித்து பேசுகிறார்கள். குமாரசாமியும் இதுகுறித்து பேசியுள்ளார்.
இந்த முறைகேட்டில் தங்களுக்கு சாதகமான அம்சங்களை மட்டுமே அரசு வெளியிடுகிறது. இந்த பிட்காயின் முறைகேடு குறித்து ஒரு தெளிவான தகவலை கூற அரசு மறுக்கிறது. பிட்காயின் விவகாரத்தை சரியான முறையில் நடத்துகிறவர்கள் பற்றி எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இதில் ஹேக்கிங் நடந்துள்ளதா? இல்லையா? என்பது தான் தற்போதைய கேள்வி.
கவலைப்பட வேண்டாம்
அதனால் இந்த பிட்காயின் முறைகேட்டில் என்ன நடந்துள்ளது என்பதை அரசு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதில் அரசுக்கு குழப்பம் உள்ளது. இதுபற்றி கவலைப்பட வேண்டாம் என்று முதல்-மந்திரிக்கு பிரதமர் கூறியுள்ளார். ஆனால் இந்த விவகாரத்தை விட மாட்டோம். நாட்டில் முறைகேடு யார் செய்தாலும் தவறே. இதில் எந்த கட்சியினருக்கு தொடர்பு உள்ளது என்பது முக்கியமல்ல. யார்-யாருக்கு தொடர்பு உள்ளது என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும். உண்மைகள் வெளியே வர வேண்டும்.
இந்த விவகாரம் குறித்து அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாக அரசு சொல்கிறது. பெங்களூருவில் பத்மநாபநகர் மட்டுமின்றி பசவனகுடி தொகுதியிலும் காங்கிரசை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது எனது குறிக்கோள். அதற்காக நாங்கள் இப்போது இருந்தே பணியை தொடங்கியுள்ளோம். வீடு, வீடாக சென்று வாக்காளர்களின் பட்டியலை தயாரிக்க வேண்டும்.
பாதயாத்திரை
கட்சியில் யாரும் கோஷ்டியாக பிரிந்து செயல்பட வேண்டாம். கட்சியில் இருப்பது ஒரே அணி தான். அனைவரும் ஒற்றுமையாக கட்சி பணியாற்ற வேண்டும். வருகிற 14-ந் தேதி நேரு பிறந்த நாள். அன்றைய தினம் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை பணி தொடங்குகிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது. பசவனகுடி தொகுதியில் இருந்து குறைந்தது 25 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டியது அவசியம்.
மேகதாது திட்டத்தை தொடங்க வலியுறுத்தி நாங்கள் பாதயாத்திரை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். இதில் கட்சி தொண்டர்கள் அதிகளவில் கலந்து கொள்ள வேண்டும். பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்பது தான் இதன் நோக்கம். கர்நாடகத்தில் வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Related Tags :
Next Story