‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கொரட்டூர் முல்லை தெரு
சென்னை கொரட்டூர், முல்லைதெருவில் மழைநீர் குளம் போல் சூழ்ந்துள்ளது. வடிய வழி இல்லாமல் தொடர்ந்து தேங்கி இருக்கிறது. இதனால் அவசிய தேவைகளுக்கு கூட மக்கள் வெளியே வர முடியாமல் பரிதவிக்கும் நிலை உள்ளது.
வடியாத மழைநீர், மின் தடை, கொசுக்கடி என்று மும்முனை தாக்குதலால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளோம். எனவே மோட்டார் பம்புகளை பயன்படுத்தி மழைவெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மா.கிருஷ்ணன், முல்லைதெரு.
மடிப்பாக்கம் கபரேன் நகர்
சென்னை மடிப்பாக்கம் கபரேன் நகர் 9-வது தெரு மற்றும் சுற்றி உள்ள பகுதிகள் தொடர்ந்து வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன. மழை விட்டாலும் தண்ணீர் அப்படியே இருக்கிறது. இந்த தண்ணீர் எப்போது வடியுமோ? என்ற கவலை எங்களை வாட்டி வதைக்கிறது. எனவே மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் பார்வை எங்கள் தெரு மீதும் பட வேண்டும்.
-கோபால் ரங்கராஜ், மடிப்பாக்கம்.
பெருங்குடி டெலிபோன் நகர்
சென்னை பெருங்குடி டெலிபோன் நகர் 17-வது குறுக்கு தெரு ஆறு போன்று காணப்படுகிறது. மழைவெள்ளம் தொடர்ந்து சூழ்ந்திருப்பதால் இயல்பு வாழ்க்கை முடங்கி போய் உள்ளது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறோம்.எனவே இப்பகுதியில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை விரைந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பொதுமக்கள், பெருங்குடி.
மூடிக்கிடக்கும் பொது கழிப்பிடம்
சென்னை திருவொற்றியூர் தியாகராஜர் கோவில் வெளிப்புற குளக்கரை பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் தொடர்ந்து மூடியே கிடக்கிறது. இதனை திறந்தால் கோவிலுக்கு வரும் பக்தர்கள், வியாபாரிகள், பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். எனவே காட்சி பொருளாக இருக்கும் இந்த கழிப்பிடம் திறக்கப்படுமா?
-சீனிவாசன், திருவொற்றியூர்.
மின்சாரம் எப்போது வரும்?
சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு பிரகாஷ் நகரில் தேங்கிய மழைவெள்ளம் இன்னும் வடியவில்லை. மின்சாரம் தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளது. குடிநீர் தொட்டியில் இருந்த தண்ணீரும் காலியாகிவிட்டது. மோட்டார் போட முடியவில்லை. இதனால் சொல்லொணாத் துயரத்தை அனுபவிக்கிறோம். வெளியே தண்ணீர் ஓடுகிறது. வீட்டுக்குள் பயன்படுத்த தண்ணீர் இல்லை. எனவே இப்பகுதியில் சூழ்ந்த மழைநீரை வெளியேற்றி மின்சாரம் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பொதுமக்கள், பொன்னியம்மன்மேடு.
கால்வாய் தூர்வாரப்படுமா?
செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுத்தேரி ராமகிருணா மடம் அருகே உள்ள மலையில் இருந்து வரும் மழைநீர் கால்வாயில் செல்ல முடியாத அளவுக்கு பல ஆண்டுகளாக கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் லேசான மழை பெய்தாலே இப்பகுதியில் அதிகம் தண்ணீர் தேங்குகிறது. எனவே இப்பிரச்சினைக்கு செங்கல்பட்டு மாவட்ட மழை வெள்ள மீட்பு பணியை கவனிக்க நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா தீர்வு காண வேண்டும்.
-கே.முனுசாமி, அனுமந்தபுத்தேரி.
வழுக்கி விழும் வாகன ஓட்டிகள்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தாலுகா பழைய பெருங்களத்தூர் முடிச்சூர் அன்னை இந்திரா நகர் 10-வது தெரு விரிவு பகுதியில் மழை நீர் செல்ல வாய்க்கால் தோண்டி அந்த களிமண்ணை சாலை மேல் போட்டனர். தற்போது மழை நின்றுள்ள நிலையில் இந்த சாலை மிக மோசமாக உள்ளது. வாகன ஓட்டிகள் வழுக்கி விழும் நிலை உள்ளது.
- குமார், முடிச்சூர்.
கொசுக்கள் தொல்லை
காஞ்சீபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையம் புதுப்பாளையத் தெருவில் பொது குடிநீர் தொட்டி உள்ளது. தண்ணீர்பிடிக்கும் போது வீணாகும் தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் தேங்கி கழிவுநீர் போன்று காட்சி அளிக்கிறது. இதனால் இந்த இடம் கொசுக்கள் உற்பத்தி கூடாரமாக மாறி உள்ளது. எனவே கொசுக்கள் தொல்லையால் அவதிப்படுகிறோம்.
- பொதுமக்கள், பிள்ளையார்பாளையம்.
ஆபத்தான மின் மாற்றி கம்பம்
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஞாயிறு ஊராட்சியில் புது குப்பம் கிராமத்தில் மின்சார டிரான்ஸ்பார்மர் (மின் மாற்றி) கம்பம் உறுதித்தன்மையை இழந்து லேசாக சாய்ந்தநிலையில் உள்ளது. பலத்த காற்று வீசினால் இந்த மின்மாற்றி கம்பம் தாக்குப் பிடிக்குமா? என்று தெரியவில்லை. எனவே மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- லோகேஸ்வர ராவ், புதுகுப்பம் கிராமம்.
Related Tags :
Next Story