திருவள்ளூர் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 4-ம் வகுப்பு மாணவன் சாவு


திருவள்ளூர் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 4-ம் வகுப்பு மாணவன் சாவு
x
தினத்தந்தி 13 Nov 2021 12:01 PM IST (Updated: 13 Nov 2021 12:01 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 4-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கூவம் கிராமம், புதிய காலனியை சேர்ந்தவர் சுதாகர். கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சுகன்யா என்ற மனைவியும், ஜீவந்த்குமார் (வயது 9) என்ற ஒரு மகனும் உள்ளனர். ஜீவந்த்குமார் கூவம் பகுதியில் உள்ள அரசினர் பள்ளியில் 4-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. கூவம் ஏரியில் தண்ணீர் நிரம்பியதை தொடர்ந்து பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று ஏரி நீரை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று சிறுவன் ஜீவந்த்குமார் அதே பகுதியை சேர்ந்த தனது சக நண்பர்கள் 4 பேருடன் மீன்பிடிப்பதற்காக தூண்டிலை எடுத்துக்கொண்டு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி ஏரியில் விழுந்ததில் வேகமாக சென்ற வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் கூச்சலிட்டனர், அங்கு வயலில் வேலை செய்துகொண்டிருந்த கிராம மக்கள், ஏரியில் குதித்து வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவனை சுமார் 2 மணி நேரம் தேடலுக்கு பின்னர் பிணமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த ஜீவந்த் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது சாவு குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

Next Story