பாலாற்றில் வெள்ளப்பெருக்கு வாலாஜாபாத்-அவளூர் தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை
காஞ்சீபுரம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து வாலாஜாபாத்-அவளூர் தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
வாலாஜாபாத்,
கடந்த சில நாட்களாக தமிழக ஆந்திர எல்லையோரங்களில் பெய்த மழையின் காரணமாகவும் ஆந்திர மாநில நீர்த்தேக்கங்களில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள உபரிநீர் பாலாற்றில் திறந்து விடப்பட்டு வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்டம் வழியாக காஞ்சீபுரம் பாலாற்றில் வந்துகொண்டிருக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாப்பேட்டை பூண்டி அணைக்கட்டில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் காஞ்சீபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் தாலுகாவிலுள்ள பாலாற்றின் இரு கரையோரமுள்ள 30 கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட கலெக்டர் விடுத்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, ஆற்றை கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ இறங்க வேண்டாம் எனவும், கால்நடைகள் ஆற்றுக்கு செல்லாமல் பாதுகாத்துகொள்ளவும் வீட்டில் உள்ள சிறுவர், சிறுமிகளை ஆற்றின் அருகில் செல்லாமல் இருக்க பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறும் பொதுமக்களை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கேட்டுகொண்டார்.
இந்த நிலையில் வாலாஜாபாத் அருகே உள்ள வாலாஜாபாத் - அவளூர் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதால் போக்குவரத்தை தடை செய்யவும் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி வாலாஜாபாத்- அவளூர் தரைப்பாலத்தில் போக்குவரத்தை தடை செய்து தடுப்புகளை போலீசார் ஏற்படுத்தி உள்ளனர்.
இதன் காரணமாக வாலாஜாபாத்தில் இருந்து அவளூர் தரைப்பாலம் வழியாக செல்லும் அவளூர், அங்கம்பாக்கம், கன்னடியன் குடிசை, கம்மராஜபுரம், தம்மனூர், வள்ளி மேடு, இளையனார்வேலூர் காவாந்தண்டலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தரைப்பாலம் திடீரென மூடப்பட்டதால் வாலாஜாபாத்தில் இருந்து கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story