தொட்டபெட்டா சாலையை சீரமைக்க ரூ15 லட்சம் ஒதுக்கீடு
தொட்டபெட்டா சாலையை சீரமைக்க ரூ15 லட்சம் ஒதுக்கீடு
ஊட்டி
ஊட்டியில் பெய்த தொடர் மழை காரணமாக தொட்டபெட்டா சாலையில் விரிசல் ஏற்பட்டு பெயர்ந்தது. அதனை சீரமைக்க ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
தொட்டபெட்டா சாலை
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 4 மாதங்களுக்குப் பின்னர் கடந்த ஆகஸ்டு 23-ந் தேதி முதல் அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக ஊட்டி-கோத்தகிரி சாலை தொட்டபெட்டா சந்திப்பில் இருந்து தொட்டபெட்டா மலைச்சிகரம் செல்லும் சாலை பெயர்ந்து விழுந்தது. அதன் அடிப்பகுதியில் மழைநீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட குழாய் சேதமடைந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சாலை பழுதடைந்ததால் தொட்டபெட்டா மலைச்சிகர சுற்றுலாத்தலம் தொடர்ந்து கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டு உள்ளது.
இந்த சாலை சீரமைக்கப்படாததால் சுற்றுலா பயணிகளை நம்பி அங்கு பிழைப்பு நடத்தி வரும் வியாபாரிகள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் வருமானமின்றி பாதிக்கப்பட்டு உள்ளனர். வேறுவழியின்றி வியாபாரிகள் மாற்று தொழிலுக்கு சென்று வருகின்றனர். மேலும் பிற சுற்றுலாத் தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா சென்று மூடப்பட்டு இருப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். இந்தநிலையில் பழுதடைந்த தொட்டபெட்டா சாலையை சீரமைப்பது குறித்து அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
ரூ.15 லட்சம் ஒதுக்கீடு
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ரூ.15 லட்சம் ஒதுக்கீட்டில் தொட்டபெட்டா சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. முதலில் பெயர்ந்த இடத்தில் தடுப்புச்சுவர் அமைக்கப்படுகிறது. பின்னர் மழைநீர் கால்வாய் சீரமைக்கப்பட்டு சாலை புதுப்பிக்கப்படுகிறது. பழுதடைந்த சாலையை சீரமைக்கும் பணி ஓரிரு நாட்களில் தொடங்குகிறது. இந்த பணியை 20 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்பின்னர் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட தொட்டபெட்டா மலைச்சிகரம், சாலை சேதமடைந்ததால் 7 மாதங்களாக சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. சுற்றுலா தலத்தை மீண்டும் திறக்க, பழுதடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story