நீலகிரியில் 370 இடங்களில் சிறப்பு முகாம்
நீலகிரியில் 370 இடங்களில் சிறப்பு முகாம்
ஊட்டி
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீலகிரியில் 370 இடங்களில் சிறப்பு முகாம் நடந்தது.
சிறப்பு முகாம்
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 30-ந் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதையொட்டி கடந்த 1-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. அதில் தங்களது பெயர் உள்ளதா என்று உறுதி செய்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கு சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
ஊட்டி தொகுதியில் 239 வாக்குச்சாவடிகள், கூடலூர் (தனி) தொகுதியில் 222 வாக்குச்சாவடிகள், குன்னூர் தொகுதியில் 225 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 686 வாக்குச்சாவடிகளின் அமைவிடங்களான 370 இடங்களில் சிறப்பு முகாம் நடந்தது. அங்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணியில் இருந்தனர். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6, பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய படிவம் 8, ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8ஏ பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பித்தனர். ஊட்டியில் உள்ள வாக்குச்சாவடிகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கு இளைஞர்கள், பொதுமக்கள் வந்து விண்ணப்பித்தனர்.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க www.nvsp.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் வாக்காளர் உதவி எண் 1950 தொடர்பு கொண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என்று கேட்டறிந்து உறுதி செய்யலாம். வாக்காளர் உதவி எண் என்ற செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் நடக்கிறது என்றனர்.
ஆய்வு
நீலகிரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரான கூடுதல் நில நிர்வாக ஆணையர் ஜெயந்தி குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் நேற்று நடந்த சிறப்பு முகாம்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி உடனிருந்தார்.
Related Tags :
Next Story