மளிகை கடைக்கு மர்ம ஆசாமி தீ வைத்ததால் பரபரப்பு
மளிகை கடைக்கு மர்ம ஆசாமி தீ வைத்ததால் பரபரப்பு
வீரபாண்டி,
திருப்பூரில் சிகரெட் வாங்கிய போது ரூ.500-க்கு சில்லறை கொடுக்காததால் மளிகை கடைக்கு மர்ம ஆசாமி தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிகரெட் வாங்கிய ஆசாமி
திருப்பூர் நொச்சிபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் நொச்சிபாளையம் பிரிவில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடை அருகே சிகரெட் விற்பதற்காக பெட்டிக்கடை ஒன்றும் வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் குடிபோதையில் 35 வயது மதிக்க தக்க ஆசாமி ஒருவர் வந்து 500 ரூபாய் நோட்டை கொடுத்து பெட்டிக்கடையில் சிகரெட் கேட்டு உள்ளார்.
அப்போது கடையில் இருந்தவர் 500 ரூபாய் நோட்டுக்கு சில்லறை இல்லை என கூறி உள்ளார். இதையடுத்து போதை ஆசாமி 500 ரூபாய்க்கு 10 சிகரெட் கொடு என்று கேட்டு வாக்கு வாதம் செய்தார். இதையடுத்து கடைக்காரர் அந்த ஆசாமியை துரத்தி விட்டார். ஆனாலும் அந்த ஆசாமி வீட்டிற்கு போகாமல் டாஸ்மாக் கடைக்கு சென்று மேலும் மதுவாங்கி குடித்துள்ளார். பின்னர் இரவு 10 மணிவரையும் மளிகை கடை அருகிலேயே காத்திருந்தார். பின்னர் கடையை பூட்டும் நேரம் கடைக்கு சென்று மீண்டும் 500 ரூபாய் நோட்டை கொடுத்து சிகரெட் கேட்டு தகராறு செய்துள்ளார். இதையடுத்து கடைக்காரர் அந்த ஆசாமியை திட்டி விட்டு கடையை பூட்டிச்சென்று விட்டார்.
ஆனால் அந்த போதை ஆசாமி கடைக்காரரை பழிவாங்கும் நோக்கில் கடை அருகில் காத்திருந்துள்ளார்.
கடைக்கு தீ வைப்பு
கடைக்காரர் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். சிறிது நேரத்தில் மளிகை கடையின் ஷட்டர் பகுதி திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் ரூ.1 கோடி மதிப்புள்ள மளிகைப்பொருட்கள் தப்பியது.
இதையடுத்து கடையை பூட்டி சென்ற சிறிது நேரத்தில் எப்படி தீப்பிடித்தது? வேறு யாராவது தீ வைத்தார்களா? என அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது 500 ரூபாய் நோட்டை கொடுத்து சிகரெட் கேட்டு தகராறு செய்த போதை ஆசாமி, தனது வாகனத்தில் இருந்து பெட்ரோல் பிடித்து வந்து பூட்டிய கடையின் ஷட்டரில் ஊற்றி விட்டு, சாவகாசமாக தீ வைத்து விட்டு அங்கிருந்து செல்வது பதிவாகி இருந்தது. இதுகுறித்து மளிகை கடைக்காரர் கொடுத்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கடைக்கு தீ வைத்த ஆசாமியை தேடி வருகின்றனர். போதை ஆசாமி கடைக்கு தீ வைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story