விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
விழுப்புரம் மாவட்டத்தில் 1,962 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெற்றது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் 1.1.2022 தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் வருகிற 30-ந் தேதி வரை நடைபெறுகிறது. இப்பணிக்காக வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்ப்பதற்கும், பெயர் நீக்கம், திருத்தம் மேற்கொள்ளுதல் உள்ளிட்டவைகளுக்காக தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 1,962 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது.
காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் அந்தந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் மேற்கொள்தல் உள்ளிட்டவை தொடர்பாக உரிய படிவத்தில் கோரிக்கை மனுக்களை வாக்குச்சாவடி அமைவிட நியமன அலுவலரிடம் கொடுத்தனர். இம்முகாமில் 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் பலர் தங்களுடைய பெயரை, வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக படிவத்துடன் வயதிற்கான ஆதாரமாக உரிய ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பித்தனர். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அரசுமேல்நிலைப்பள்ளி, முகையூர் ஒன்றியம் அடுக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் நடந்த சிறப்பு முகாமை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேஸ்வரன், மாவட்ட கலெக்டர் டி.மோகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story