மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்காமல் ஆக்கப்பூர்வமான பணிகளில் தி.மு.க. அரசு கவனம் செலுத்த வேண்டும்-ஓசூரில் எச்.ராஜா பேட்டி
மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்காமல் ஆக்கப்பூர்வமான பணிகளில் தி.மு.க. அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று ஓசூரில் எச்.ராஜா கூறினார்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் கட்சியினருக்கு 3 நாள் பயிற்சி முகாம் ஓசூரில் நடந்தது. இதில் கலந்துகொள்ள வந்த கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மும்பை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் கனமழை பெய்தால், அரைமணி நேரத்திற்குள்ளாக மழைநீர் வடிந்து, மழை பெய்த சுவடே தெரிவதில்லை. ஆனால் ஆண்டுதோறும் சென்னையில் மழை பெய்யும் போதெல்லாம், மழைநீர் வடிவதற்கான வழியே இல்லை. சென்னையில் ஏரிகள், குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, கல்வி நிலையங்களாகி விட்டன. வள்ளுவர் கோட்டம் கூட, ஏரியில் தான் அமைக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்த தி.மு.க. 6 மாதங்களில் குறைந்தபட்சம் வடிகால்களை சீரமைத்திருக்க வேண்டும். தமிழக கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கும் திட்டத்தை சட்டவிரோதம் என்று கூறி, நீதிமன்றம் தடை விதித்து விட்டது. தி.மு.க. ஆட்சியில் இதுவரை நடந்தது அனைத்தும் பொய், போலி, பிரிவினைவாதத்தின் அடிப்படையிலானது. மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்காமல், ஆக்கப்பூர்வமான பணிகளில் தி.மு.க. அரசு கவனம் செலுத்த வேண்டும். இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல. இவ்வாறு எச்.ராஜா கூறினார். அப்போது மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story