தங்க முலாம் பூசிய கவரிங் நகைகளை அடகுவைத்து ரூ.1½ கோடி மோசடி
பரமக்குடி அருகே கூட்டுறவு வங்கியில் தங்க முலாம் பூசிய கவரிங் நகைகளை அடகுவைத்து ரூ.1½ கோடி மோசடி குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நயினார்கோவில்
பரமக்குடி அருகே கூட்டுறவு வங்கியில் தங்க முலாம் பூசிய கவரிங் நகைகளை அடகுவைத்து ரூ.1½ கோடி மோசடி குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாரிகள் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட நயினார்கோவில் யூனியன் பி.கொடிக்குளம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் கிளை அலுவலகம் கிளியூரில் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கிளியூர் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது அடகு வைத்த நகைகளை ஒவ்வொன்றாக சோதனை செய்து வந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ள பாக்கெட்டுகளில் உள்ள நகைகளை உரசிப் பார்த்தபோது, அது தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகள் என தெரியவந்தது. அதன் பின் சங்கத்தில் உள்ள அனைத்து நகைகளையும் ஒவ்வொன்றாக சோதனை செய்ததில் சுமார் 74 பாக்கெட்டுகளில் தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ரூ.1 கோடியே 47 லட்சம்
இந்த 74 பாக்கெட்டுகளில் உள்ள நகைகளுக்கு கொடுக்கப்பட்ட தொகையின் மதிப்பு சுமார் ரூ.1 கோடியே 47 லட்சம் ஆகும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் அதிகாரிகள் இதில் தொடர்பு உடைய நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நகைகளை அடகு வைத்துள்ள விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பி.கொடிக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும் இதுபோல் மோசடி ஏதும் நடந்துள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story