கிருஷ்ணகிரி அணையில் இருந்து வினாடிக்கு 1,323 கனஅடி தண்ணீர் திறப்பு: தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி அணையில் இருந்து வினாடிக்கு 1,323 கனஅடி தண்ணீர் திறப்பு: தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 13 Nov 2021 9:59 PM IST (Updated: 13 Nov 2021 9:59 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அணையில் இருந்து வினாடிக்கு 1,323 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அணையில் இருந்து வினாடிக்கு 1,323 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையாலும், கெலவரப்பள்ளி அணையில் திறக்கப்படும் தண்ணீராலும் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்துஅதிகரித்து வருகிறது. 
அதன்படி நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அணைக்கு  நீர்வரத்து வினாடிக்கு 882 கனஅடியாக இருந்தது. நேற்று காலை வினாடிக்கு 1,323 கனஅடியாக நீர்வரத்துஅதிகரித்தது.
மேலும் 52 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணகிரி அணையில் தற்போது 51.05 அடிக்கு தண்ணீர் உள்ளதால், அணையில் இருந்து பாசன கால்வாய்கள் மற்றும் தென்பெண்ணை ஆற்றிலும் வினாடிக்கு 1,323 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
தென்பெண்ணை ஆற்றில் கூடுதலாக திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர், அணை பூங்காவிற்கு செல்லும் தரைப்பாலத்தை ஒட்டிச்செல்கிறது. ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், காவேரிப்பட்டணம், நெடுங்கல், இருமத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் தென்பெண்ணை ஆற்று கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story