பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவிலில் சிறப்பு பூஜை


பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 13 Nov 2021 4:36 PM GMT (Updated: 13 Nov 2021 4:36 PM GMT)

குருபெயர்ச்சியையொட்டி திருப்பத்தூர் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பத்தூர்,

குருபெயர்ச்சியையொட்டி திருப்பத்தூர் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

குருபெயர்ச்சி விழா

நவக்கிரகங்களில் பூரண சுப கிரகம் குருபகவான் ஆண்டுதோறும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயருவது வழக்கம். அதன்படி இந்தாண்டு நேற்று மாலை 6.21 மணிக்கு குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியானார். இதைத்தொடர்ந்து வருகிற 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ந்தேதி வரை இந்த ராசியில் குருபகவான் சஞ்சரிக்கிறார்.
 குருபெயர்ச்சியையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள குருபகவான் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.நவக்கிரகங்களில் குருபகவானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பல்வேறு ராசிதாரர்கள் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலத்தில் பிரசித்தி பெற்ற தட்சிணாமூர்த்தி கிழக்கு திசையில் எழுந்தருளி உள்ளார். 6 கார்த்திகை பெண்களுக்கு சாபவிமோசனத்தை வழங்கியதால் இந்த தட்சிணாமூர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தவர்.
குருபெயர்ச்சியையொட்டி நேற்று காலை முதல் குருபகவானுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. அதன்பிறகு சந்தனகாப்பு அணிவிக்கப்பட்டு வெள்ளி அங்கி சாத்தப்பட்டது.
முன்னதாக குருபகவான் சன்னதி முன்பு உள்ள பகுதியில் உற்சவர் குருபகவான் 6 கார்த்திகை பெண்களுக்கு சாபவிமோசனத்தை போக்கும் வகையில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று தங்க அங்கியில் குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்தார். அப்போது குருபகவானுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

சாமி தரிசனம்

குருபெயர்ச்சியை முன்னிட்டு பட்டமங்கலம் கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ஒருவழியாக சென்று சாமி தரிசனம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. தரிசனம் செய்ய வந்த பக்தர்களை கட்டாயமாக முககவசம் அணிந்து வரும்படி கோவில் நிர்வாகத்தினர் அறிவுறுத்தினர்.
 சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்து குருபகவானை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் வீரப்பச் செட்டியார் குடும்பத்தினர் செய்திருந்தனர்.
இதே போல அனைத்து சிவன் கோவில்களிலும், நவக்கிரகங்கள் உள்ள அனைத்து கோவில்களிலும் குருபெயர்ச்சியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

Next Story