நடுரோட்டில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை


நடுரோட்டில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 13 Nov 2021 10:10 PM IST (Updated: 13 Nov 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

மனைவியை இழந்த சோகத்தில் 13 ஆண்டுக்கு முன்பு மகனுடன் விஷம் குடித்து விட்டு பிழைத்த தொழிலாளி நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆரணி

மனைவியை இழந்த சோகத்தில் 13 ஆண்டுக்கு முன்பு மகனுடன் விஷம் குடித்து விட்டு பிழைத்த தொழிலாளி நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

விபத்தில் மனைவியை இழந்தவர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த புங்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 45), கூலித்தொழிலாளி. 

இவரின் மனைவி சங்கீதா. 2008-ம் ஆண்டு ஒரே மோட்டார்சைக்கிளில் ஸ்டீபன், சங்கீதா, குழந்தை ஸ்ரீதர்ஜோஸ் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். வெள்ளேரி கிராமம் அருகே சென்றபோது, ஏற்பட்ட விபத்தில் சங்கீதா உயிரிழந்தார்.

அந்த விபத்தில் ஸ்டீபனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, ராடு பொருத்தப்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த ஸ்டீபன் 2009-ம் ஆண்டு உணவில் விஷத்தை கலந்து குழந்தை ஸ்ரீதர்ஜோசுக்கு கொடுத்து விட்டு, அதே உணவை அவரும் சாப்பிட்டார்.

அதில் குழந்தை ஸ்ரீதர்ஜோஸ் பரிதாபமாக உயரிழந்தான். ஆபத்தான நிலையில் இருந்த ஸ்டீபன் தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். 

தீக்குளிப்பு

இருப்பினும் மனைவி, குழந்தையை இழந்த பிறகு தான் மட்டும் ஏன் உயிருடன் இருக்க வேண்டும்? எனக் கருதிய ஸ்டீபன் விரக்தியில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை வடுகசாத்தில் இருந்து ஏரிக்குப்பம் செல்லும் சாலையில் ஒரு இடத்தில் உடலில் ெபட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். 

அந்த வழியாக யாரும் வராததால் அவரை காப்பாற்ற முடியவில்லை. தீயில் உடல் கருகிய ஸ்டீபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுபற்றி தகவல் அறிந்ததும் அவருடைய தாயார் புனிதா ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார்.

 சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஸ்டீபனின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story